எடப்பாடி பழனிச்சாமி அரசு நீடிக்குமா? சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

edappadiசென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை ஆளுநரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மைைய நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சட்டசபையில் பெரும் பான்மை பலத்தை நிரூபிப்பதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.

இன்று சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்எல்ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

இதையடுத்து, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார். இதையடுத்து வாக்கெடுப்பு நடைபெறும். தற்போது தமிழகத்தில் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அவரது அணியில் தற்போது 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார்.

ஆர்.கே.நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டதால் ஒரு தொகுதி காலியாக உள்ளது. மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நடராஜ் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது ஓபிஎஸ் அணியில் 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதே நேரத்தில் 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 8 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியும் எதிராக வாக்களிக்க உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் எதிராக வாக்களிக்கிறது.

இதனால் ஓபிஎஸ் அணி உள்பட மொத்தம் 108 வாக்குகள் எடப்பாடிக்கு எதிராக விழும் என கருதப்படுகிறது. அதேவேளையில் 123 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து குறைந்தது 7 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தால் எடப்பாடி அரசு தப்புவது கடினம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு யாருக்கு சாதகமாக அமையப் போகிறது என்பது இன்று தெரியவரும்.

tamil.oneindia.com

TAGS: