சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது

vidyasagar-raoசென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

அப்போது மார்ஷல்கள் (அவைக் காவலர்கள்) உடையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கிழிந்த சட்டையுடன் சென்ற ஸ்டாலின் அங்கு சட்டசபையில் நடந்த கலவரம் குறித்து விளக்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநர் இதுகுறித்து தெளிவான பதில் கொடுத்ததாக தெரியவில்லை.

இதனால்தான் மெரீனா கடற்கரைக்கு வந்து மு.க.ஸ்டாலின் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். ஆனால் போலீஸார் துரிதமாக செயல்பட்டு அவரைக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் தற்போது சட்ட ரீதியான போராட்டத்தில் திமுக குதித்துள்ளது.

திமுக தரப்பு தற்போது 2 முக்கிய அம்சங்களை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. 1. சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை 2 முறை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சட்டப்படி தவறாகும். 2. அவைக் காவலர்கள் போர்வையில் காவல்துறை அதிகாரிகளை உள்ளே அனுப்பியுள்ளனர். முதல்வரே இதைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரண்டு வலுவான அம்சங்களையும் கையில் எடுத்து கோர்ட் படியேற திமுக தீர்மானித்து விட்டது. இதைத்தான் இன்று ஆளுநரை நேரில் சந்தித்த திமுக எம்.பிக்களும் தெளிவாக வலியுறுத்திக் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

திமுக தரப்பு இதுபோல வலுவான அம்சங்களை கையில் எடுத்துக் கொண்டு கோர்ட் படியேறினால் ஆளுநர் தரப்புக்கும், சபாநாயகர், முதல்வருக்கும் சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவசரம் அவசரமாக சட்டசபை செயலாளரிடம் நடந்தது என்ன என்று அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

-oneindia.com

TAGS: