நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைகோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு

stalinசென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை நடைபெறுகிறது.

தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றார். அவரது அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், எதிரணியாக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தியது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்தரப்பினரின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மைக் உடைப்பு, மேஜை உடைப்பு, சட்டை கிழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. சபாநாயகர் பிடித்து தள்ளப்பட்டார். அவரது நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.சண்முகசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் இன்று இதுதொடர்பாக பொறுப்பு நீதிபதி ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார். இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து ஸ்டாலின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதமானது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிறைக் கைதிகளைப் போல் பேரவைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் யாரும் மனசாட்சிப்படி வாக்களிக்கவில்லை.

கட்டாயத்தின் பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டிருந்ததாலேயே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார்.

இது ஜனநாயக மரபு அல்ல. இந்த வாக்கெடுப்பை மக்களும் நிராகரிக்கிறார்கள். இது தொடர்பாக ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறோம். எனவே, இந்த அரசை கலைத்துவிட்டு மீண்டும் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்.

இந்த முறை ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை காலை இந்த வழக்கு அவசர வழக்காக முதலில் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: