சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இதனால் ஆளும் கட்சி தரப்பு ஆட்டம் கண்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னதாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்திற்கு பெண்கள் அதிகளவில் வந்திருந்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். சேலத்தில் மேட்டூர் எம்எல்ஏ செம்மலை தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றதது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றது எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மதுரை மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டசபை உறுப்பினர்கள் ஆர்.சரவணன் (தெற்கு), மாணிக்கம் (சோழவந்தான்) மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், தவசி, சுந்தரராஜன் மற்றும் சாலமுத்து உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
அதேபோல் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பி.எச். மனோஜ்பாண்டியன் தலைமை வகித்தார். அங்கும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். எதிர்பார்த்தை விட அதிக அளவில் பொதுமக்களும், தொண்டர்களும் கலந்துகொண்டதால் கூடுதலாக பந்தல் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் பந்தல் நிரம்பி வழிந்தது சேர்கள் இல்லாததால் தொண்டர்கள் தரையில் அமர்ந்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். திருச்சி, சிவகங்கை, திருப்பூர், கரூர், தஞ்சை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஆவடி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் 2௦ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதால் சசிகலா தரப்புக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல இடங்களில் காவல்துறை மூலம் போராட்டத்திற்கு முட்டுகட்டை போட சசிகலா தரப்பு முயற்சி செய்தது. ஆனால் திட்டமிட்டப்படியே போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர் ஓபிஎஸ் தரப்பு. பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டதே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சசிகலா தரப்பு பெரும் அதிர்ச்சியில் உள்ளது.