இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்!

seeman344கோவை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய அரசு இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவியை நிறுத்தவும், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான் பேசியதாவது: கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி ஆதம்பாலம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இலங்கை வீரர்களுக்கு நம் நாட்டில் ராணுவ பயிற்சி, பண உதவி மற்றும் போர்க் கப்பலையும் மத்திய அரசு பரிசாக வழங்குகிறது.

ஆனால் அவர்களிடமிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் 150 படகுகளையும் ஏன் மத்திய அரசால் திருப்பி வாங்கித்தர இயலவில்லை. நம்மை விட மிகவும் சிறிய நாடான இலங்கைக்கு ஏன் நம்மைப் பார்த்து அச்சம் ஏற்படவில்லை.

தமிழக மீனவர்கள் என்பதாலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறரா. அதே சமயம் வட இந்தியரோ அல்லது கேரள மாநிலத்தவர்களோ சுட்டுக் கொல்லப்பட்டால் இது போன்று தான் மத்திய அரசு செயல்படுமா. கட்சத்தீவு தமிழர்களின் பூர்வீக சொத்து என்பதற்கான ஆவணங்கள் உள்ளன.

தற்போது இலங்கை கடற்படை வேதாரண்யம் வரை வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆகவே, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய அரசு இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவியை நிறுத்தவும், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

oneindia.com

TAGS: