ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 177 தமிழர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்.. வனத்துறை அதிகாரி தகவல்

andhrapoliceattackகடப்பா: யாரோ செய்யும் குற்றத்திற்கு செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர் என்று வனத்துரை அதிகாரி மூர்த்தி கவலை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் ஒண்டிபேண்ட்டா அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 கார்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்பிலான 280 செம்மரக் கட்டைகள், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 8 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வனப் பகுதிக்குள் செம்மரம் வெட்டச் சென்றிருந்தது தெரியவந்தது.

தமிழக தொழிலாளர்கள் கைது

இதைத்தொடர்ந்து, போலீஸாரும், வனத் துறை ஊழியர்களும் இணைந்து வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, காசிபேட்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டு வனச் சரக அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

விசாரணை

பிடிபட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் பொதட்டூரில் வன பாதுகாப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார்.

இளைஞர்கள் பலிகடா

அப்போது, செம்மரம் கடத்தலை தடுக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்று கூறிய அதிகாரி, கடத்தலுக்கு மூளையாக செயல்படுபவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்

கைது செய்யப்பட்ட 177 தமிழர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே இந்த 177 பேரின் நிலை என்ன என்பது தெரியவரும்.

oneindia.com

TAGS: