டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாளை மறுநாள் முதல் 100 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகத்தில் மேக்கேதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை மறுநாள் முதல் மொத்தம் 100 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டம் குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியில் வருகிற 14-ந்தேதி தொடங்கி 100 நாட்கள் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடி வீட்டின் முன்பு மண் சட்டியில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.