சேலம்: பருவமழை பொய்த்துப்போனது ஒருபுறம் தண்ணீர் பிரச்சினையை உருவாக்கியுள்ள நிலையில் காவிரி டெல்டாவின் உயிர் நாடியான மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சரிந்துள்ளதால் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கும் மட்டுமல்லாது கரையோர மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்கள் குடிநீருக்காக மேட்டூர் அணை தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளன.
உச்சநீதிமன்றம் உத்தரவுபடி கர்நாடக அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் மாதம் 12ஆம்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாததால் 3 மாதம் காலதாமதமாக செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
விவசாயிகள் தற்கொலை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப்போனது. கர்நாடகாவும் தண்ணீர் தராமல் ஏமாற்றியதால் இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து போனது. தண்ணீரை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் கருகிய பயிர்களைக் கண்டு தற்கொலை செய்து கொண்டனர். 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சரிந்த நீர்மட்டம்
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 29.95 அடியாக குறைந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 30 அடிக்கும் கீழாக இதுபோல் நீர்மட்டம் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் ஆதாரத்தை கொண்டு சேலம் மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் இந்த அணையை நம்பியுள்ள சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தற்போது சேலம் மாநகராட்சியில் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
12 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை என்னும் நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
-tamil.oneindia.com