புதிய இந்தியா உருவாகி வருகிறது; தேர்தலில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றியின் மூலம் தேசத்தின் வளர்ச்சி குறித்த நமது இலக்கை எட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
பொற்காலம்:
ஒரு நாட்டில் பொற்காலம் என்பதை எளிதில் உருவாக்கிவிட முடியாது. அதற்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், தியாக மனப்பான்மையுடனும் மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடனும் பணியாற்ற வேண்டும்.
இப்போது, நமது நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள். இந்த நிலையில், நமக்குக் கிடைத்துள்ள வெற்றி புதிய இந்தியா உருவாவதற்கான அடித்தளமாகும். நாம் அனைவரும் இணைந்து 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
நமது புதிய இந்தியா, நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரின் கனவை நிறைவேற்றுவதாகவும், மகளிரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும், ஏழை மக்களின் மேம்பாட்டை மையமாகக் கொண்டதாகவும் இருக்கிறது. தேர்தலில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றியின் மூலம் தேசத்தின் வளர்ச்சி குறித்த இலக்கை நாம் எட்ட வேண்டும்.
பணிவுடன் பணி:
இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு நாம் மிகுந்த பணிவுடன் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் பணியாற்றும் அரசாக இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். நம்முடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது நம்மை எதிர்ப்பவர்களுக்கும் நன்மை தரும் அரசாக செயல்பட வேண்டும்.
நமது அரசு தெரியாமல் சில தவறுகளைச் செய்யலாம். ஏனெனில் நாம் அனைவருமே சாதாரண மனிதர்கள்தான். ஆனால், உள்நோக்கத்துடன் எந்தத் தவறான செயல்களிலும் அரசு ஈடுபடாது.
விருட்சமான விதை:
பாஜகவுக்கு இது பொற்காலமாகும். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் நாடு முழுவதும் பயணித்து கட்சியை வளர்த்ததற்கான பயன் இப்போது கிடைத்துள்ளது. அவர்கள் தூவிய விதைகள்தான் இப்போது நமக்கு விருட்சமாகக் கிடைத்துள்ளது. உலகிலேயே ஜனநாயகம் உள்ள மிகப்பெரிய கட்சியில் நாம் இருக்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
வெற்றியை யாரும் தடுக்க முடியாது:
நமது ஆட்சியில் ஏழைகள் வளமடைந்து வருகின்றனர். நடுத்தர மக்களின் சுமை குறையத் தொடங்கி விட்டது. எனவே, அடுத்து வரும் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெறுவதை எவராலும் தடுத்துவிட முடியாது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
தேர்தல் வெற்றியைக் கொண்டு செயல்படாமல், நாட்டின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களின் பணிகளையும் நாம் பாராட்ட வேண்டும்’ என்றார் மோடி.
பாரத மாதாவைப் போற்றியும், மோடியை வாழ்த்தியும் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து உற்சாக கோஷம் எழுப்பினர்.
அமித் ஷா நம்பிக்கை:
நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, “மக்களவைக்கு 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும். மோடியின் தலைமை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக கட்சி அலுவலகத்துக்கு வந்த மோடியை, அமித் ஷா வரவேற்றார்.
-http://www.dinamani.com
என்னதான் இந்தியா எப்படி உருவானாலும் , மீனவ தமிழர்கள் இலங்கை படையினரால் சாகடிப்பதை மட்டும் தடுக்க முடியவில்லை !காரணம், அது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நாடு !!!