கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அவர் ஒரு கவிஞரும் கூட. தட…தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர்.
பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்..
எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார்.
தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அந்த அதிகாரத்துக்கு பெயர்தான் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது.
யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்… ஏன்… என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம்.
கொதித்து எழுந்த அந்தக் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அந்த சிறப்பு சட்டத்தை நீக்க உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஒருநாள் இரு நாள் இல்லை. 16 ஆண்டுகள் உண்ணாவிரதம். போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு மூக்கு குழாய் வழியாக திரவ உணவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் செலுத்தப்பட்டது. ஆனால், இரோமின் நோக்கத்துக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.
”நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்… உயிர் வாழ ஆசைப்படுகிறேன்… திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்… அன்பு செய்ய விரும்புகிறேன்… எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் AFSPA சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார்.
விடிவு காலம் பிறக்கவில்லை. சட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.. துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.
ஆனால், இரோமுக்கு கிடைத்ததோ… வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட ஷர்மிளாவை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ… அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் இப்போது விரக்தியின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய போது வராத கண்ணீர் இரோமின் கண்களில் இப்போது வழிகிறது. அந்த விரக்தி அவரது ரசிகர்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலும் தெரிகிறது. ‘அந்த 90 பேருக்கு நன்றி’ என்கிறது அந்த வேதனைப் பேஸ்புக் பதிவு, ‘ இன்னொரு முறை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவே மாட்டேன் என்கிற அந்த முகத்தில் எத்தனை வேதனை.
அமான்மணி… மனைவியை கொலை செய்த வழக்கில், சிறை சென்றவர். சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார். முப்தார் அன்சாரி… இவர் யார் தெரியுமா… மாஃபியா கும்பல் தலைவர்… சிறையில் இருக்கும் இவருக்கும் மக்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர். இப்படி… குற்றப்பின்னணியுள்ள 143 பேர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்.
பதினாறு ஆண்டுகாலம் போராடிய அந்த கவிஞரின் போராளியின் அரசியல் வாழ்க்கையை’ ‘thanks for 90 votes’ என்ற வார்த்தையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள் ஜனநாயக வாதிகள்,
– Vikatan
அப்படி இல்லை ஷர்மிளா; தாங்கள் போராடியதால் தான் உலகத்திற்கு உண்மை தெரிந்தது. தாங்கள், தங்கள் போராடடத்தை முன்னெடுங்கள். இந்த பாமர மக்கள் அதிகம் சுயநல காரர்கள்; இருப்பினும் தங்கள் போராட்டம் என்பது மனித குலத்திர்ற்கு முக்கியமானது ! துவண்டு விடாதீர்கள் காரணம் நீங்கள் சாதாரண மனிதர் அல்லவே ! நிச்சயம் உண்மை உங்களை உயர்த்தும் …..