புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தில் உள்ள மடத்தில், பொறியாளர், காசாளர் மற்றும் பசு பராமரிப்பாளர்கள் முஸ்லிமாக உள்ளனர்.
உ.பி., முதல்வராக பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். தீவிர இந்து ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட இவர், கணித பட்டதாரி ஆவார். கோரக்ப்பூரில் மடத்தை துவக்கி நிர்வகித்து வருகிறார். இந்த மடத்தில் பணிபுரியும் பொறியாளர், காசாளர் என ஏராளமான முஸ்லிம்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோரக்நாத் கோவிலில் கட்டுமான பணிகளை கண்காணிக்கும் யாசின் அன்சாரி கூறுகையில், ஆதித்யநாத்துடன் நல்ல உறவு உள்ளது. அவர் எப்போது இங்கு வந்தாலும், என்னை அழைத்து, பணிகள் பற்றிய விபரத்தை தெரிவித்து கொள்வார். அவரது குடியிருப்பில் நான், அடுப்படி முதல் படுக்கையறை வரை சுதந்திரமாக சென்று வருவேன். அவருடன் இணைந்து சாப்பிடுவேன். எனது பெரியப்பா இந்த கோயிலுக்கு ஏற்கனவே இங்கு வந்துள்ளார். கோயிலின் சமையலறை பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். எனது மனைவியின் தாயார் சமையல் கண்காணிப்பாளராகவும், அவரது கணவர் தோட்டக்கலைஞராகவும் பணிபுரிந்துள்ளனர். கடந்த 1977 முதல் 83 வரை கோயில் காசாளராக இருந்துள்ளேன். 1984 முதல் கோயிலில் நடைபெறும் புனரமைப்பு பணி கண்காணிப்பாளராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கோயிலில் உள்ள பல கடைகளை முஸ்லிம்கள் நடத்தி வருகின்றனர். அவர்களில், சயத் அன்சாரி என்பவர் கூறுகையில், யோகி, ஜாதி மதம் பார்க்காமல் ஏழைகளுக்கு உதவுவதை பார்த்துள்ளேன். எனது வீட்டு திருமணத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அஜிஜூன்னிசா கூறுகையில், கடந்த 35 வருடம் இங்கு கடை நடத்தி வருகிறேன். யோகியிடமிருந்து எந்த பிரச்னையும், இடையூறும் வந்ததில்லை. அவர் உண்மையான துறவி. இவ்வாறு அவர் கூறினார்.
முகமது முடகிம் கூறுகையில், கோயிலில் உள்ளே ஏராளமான முஸ்லிம்கள் பயமில்லாமல் வாழ்கின்றனர் சம்பாதிக்கின்றனர் எனக்கூறினார்.
கோயிலின் முதல் பொறியாளராக பணிபுரிந்த நிசார் அகமது கூறுகையில், கோயிலில் பொறியாளராக பணிபுரிந்துள்ளேன். கோயில் அருகேயுள்ள மண்டபம், கடைகள், ஆசிரமம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளேன். மருத்துவமனை மற்றும் கோயிலுடன் இணைந்துள்ள பல கோயிகளை நான் நிர்மானித்துள்ளேன். தற்போது நான் ஓய்வு பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
யோகி ஆதித்யநாத் பசுக்களை பெரிதம் நேசிப்பவர். 400 மேற்பட்ட கோசாலைகளை அமைத்துள்ளார். அதன் தலைமை ஊழியராக இருப்பவர் முகமது. இவர் கூறுகையில், முன்னர் எனது தந்தை தலைமை ஊழியராக இருந்தார். தற்போது நான் இந்த பணியை செய்து வருகிறேன். எங்கள் அனைவரையும் ஆதித்யநாத் நன்றாக கவனித்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.
யோகி ஆதித்யநாத், மடத்தில் உள்ள குடியிருப்பில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது அறையில், அட்டாச்டு பாத்ரூம் உள்ளது. டிவி மற்றும் ரேடியோ ஏதுமில்லை. அவரது அறையில் உள்ள நேரு, மகாத்மா காந்தி முதல் ஆபிரகாம்லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது புத்தகங்கள் உள்ளன. டிவி மற்றும் கணிப்பொறி ஏதும் அவரது அறையில் இல்லாத நிலையில், தினமும் பத்திரிகைகளை தவறாமல் படிக்கும் வழக்கம் கொண்டவர் யோகி ஆதித்யநாத்.
-http://www.dinamalar.com