எங்களை அவமானப்படுத்தினர்: தற்கொலை முயன்ற விவசாயி கதறல்

frmerதங்களின் போராட்டத்திற்கு யாரும் செவி சாய்க்காமல் அகதிகளை போல நடத்துவதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதமர், அமைச்சர்களை சந்திக்க விடாததால் அவர்களின் கவனத்தை ஈர்க்கவே மரத்தின் மீதேறி போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மரத்தில் ஏறி தூக்குப்போடுவது, பிச்சைஎடுப்பது, தெருவில் படுத்து புரள்வது, மொட்டையடிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். தெருவிலேயே உண்டு உறங்கி 12 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று பாடை கட்டியும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் திடீரென விவசாயிகள் அகிலன் ரமேஷ் ஆகியோர் மரத்தின் மீதேறி குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் பதற்றம் உருவானது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நடிகர்களும் விவசாயிகள் கீழே இறங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் கீழே இறங்கினர். செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ரமேஷ், கடந்த 12 நாட்களாக தெருக்களில் போராடும் தங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வேதனையுடன் கூறினார். மக்களின் கவனத்தை கவர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

எல்லோரும் வருகிறார்கள், போகிறார்கள், தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சர்களை நேரில் சந்தித்து பேச நேரம் கொடுக்கவில்லை. தின்பண்டத்தை காண்பித்து ஏமாற்றுவதை போல எங்களை ஏமாற்றுகிறார்கள். அமைச்சர்கள், எம்.பிக்கள் எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் தற்கொலைக்கு முயன்றோம் என்றார்.

-http://news.lankasri.com

TAGS: