“100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்”.. நெடுவாசல் மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது!

neduvasal-11சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது.

22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர். ஜல்லிக்கட்டுக்காக வீரத்துடன் போராடியது போலவே விவசாயிகள், கிராமத்தினரின் இந்தப் போராட்டமும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று நடந்தது.

கடைசியில் பொன். ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் போராட்டத்தைக் கலைத்தது மத்திய அரசு. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்குழுவினரை சந்தித்து மார்ச் 9ம் தேதி பேச்சு நடத்தினார். அப்போது மக்கள் விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

100 மடங்கு வேகத்துடன்

அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் மக்கள் அறிவித்தனர். அதேசமயம், எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்றாவிட்டால் 100 மடங்கு வேகத்துடன் போராட்டம் மீண்டும் தொடங்கும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

மக்களை மதிக்காத பாஜக

இதோ மக்கள் எச்சரிக்கையை புறம் தள்ளி விட்டது மத்திய அரசு. திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இந்த ஒப்பபந்தத்தில் நெடுவாசலும் அடங்கியுள்ளது.

வாய்ப் பேச்சு வீரர் பொன். ராதாகிருஷ்ணன்

இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை, ஒப்பந்தம் மட்டுமே கையெழுத்தாகிறது. ஆனால் திட்டம் வராது என்று கூறுகிறார் பொன். ராதாகிருஷ்ணன். இது அவருக்கே காமெடியாகத் தெரியவில்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். ஒப்பந்தம் கையெழுத்தா பின்னர் ஒப்பந்தம் போட்டவர்கள் சும்மாவா இருப்பார்கள்.

மாற்றிப் பேச மாட்டார்களா

வேலையில் இறங்க முனைய மாட்டார்களா.. தடை வந்தால் சட்ட உதவிகளை நாட மாட்டார்களா.. அப்போது இதே அமைச்சர்கள், பாஜகவினரின் வாய்கள், சட்டத்தை நாம் மீற முடியாது, இந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வர சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை இந்த பாஜக அரசு நிச்சயம் செய்யும் என்று சொல்ல மாட்டார்களா என்று மக்கள் கேட்கிறார்கள்.

இதை விட கேவலப்படுத்த முடியாது

ஒரு மக்கள் போராட்டம் நடந்துள்ளது. இது எங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் கூறி விட்டார்கள். அதை பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மக்கள் விரும்பாத திட்டம் வராது என்று கூறி விட்டார். பிறகு எதற்கு இப்போது ஒப்பந்தம் என்று மீண்டும் கிளம்பியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் செயல் என பச்சையாக தெரிகிறது. இதை விட மக்களை கேவப்படுத்த முடியாது என்பதற்கு பாஜகவினரின் இந்த ஒரு செயலே மிகச் சிறந்த உதாரணமாகும்.

tamil.oneindia.com

TAGS: