கீழடி கண்காணிப்பாளர் மாற்றம்.. மத்திய அரசு தவறான நோக்கத்துடன் செயல்படுவதாக ஜிஆர் சாடல்

keezhadi-village

சென்னை: தொல்லியல் கண்காணிப்பாளரை மாற்றினால் கீழடி அகழாய்வுப் பணி பாதிக்கப்படும் என தெரிந்தே மத்திய அரசு தவறான நோக்கத்துடன் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராமகிருஷ்ணா அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையை அடுத்த கீழடி அகழாய்வு பணிகள் தொல்லியல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணா அமர்நாத் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணா அமர்நாத் திடீரென அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அகழாய்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரியதாலேயே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ராமகிருஷ்ணா அமர்நாத் மாற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

g-ramakrishnanசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015-16ம் ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது. சங்க கால மக்களின் நகர, நாகரீகத்திற்கான காத்திரமான தொல்லியல் சான்றுகள் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வினை அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் தலைமையிலான குழு மேற்கொண்டது.

பொருத்தமற்ற காரணங்களைக் கூறிய அமைச்சகம்

இந்நிலையில் ஆய்வுக்கான அனுமதியை வழங்காமல் மத்திய கலாச்சார துறை அமைச்சகம் பொருத்தமற்ற காரணங்களைக் கூறி தாமதித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வினை தொடர நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தின.

அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆய்வு நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்து அதில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களை ஊக்கப்படுத்தினர். டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் ஆய்வு தொடர வேண்டும் என்று பேசியபோது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

மத்திய அரசின் தவறான நோக்கம்

இந்நிலையில் மூன்றுமாத தாமதத்திற்குப் பிறகு அனுமதி வழங்கியுள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஆய்வுப் பணியை மறைமுகமாக முடக்கும் வகையில், கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளது. தொல்லியல் கண்காணிப்பாளரை மாற்றினால் அகழாய்வுப் பணி பாதிக்கப்படும் என்று தெரிந்தே தவறான நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த பணியிட மாற்றத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஆய்வுப் பணி மீண்டும் தொடரனும்

ராமகிருஷ்ணா அமர்நாத் தலைமையில் ஆய்வுப் பணி தொடரவும், அதற்குரிய நிதியை ஒதுக்கவும், ஆய்வுப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் அருங்காட்சியகம் அமைக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும், இதற்குரிய அழுத்தத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு தர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: