நிலவில் உயிரினம் வளருமா? திருவாரூர் மாணவர்கள் சாதனை

moon_nasa_001திருவாரூர் மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் நிலவில் உயிர் வளர்க்கக் கூடிய ரசாயனத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சி செய்து சாதனை படைத்துள்ளனர். வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த டீம் இண்டஸ் என்ற அமைப்பின் மூலம் “லேப் டூ மூன்” என்ற திட்டத்தை தயாரிக்கும் போட்டியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தினர். மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தப்போட்டியில் உலகம் முழுவதிலிருந் தும், 15 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் குழுக்கள் கொண்ட ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதில் முதலில் 25 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சந்தோஷ் ராவ் சவுத்ரி, சுகன்யா ராவ் சவுத்ரி (இருவரும் அண்ணன், தங்கைகள்) மற்றும் அனன்யா ஆகிய மூவரும் இணைந்து, அமெரிக்கா அரிசோனா பல்கலைக்கழக கணினி பொறியாளர் ஆட்டம் கெல்சிகார்னருடன் நிலவில் உயிரினம் வளருமா என்பதைக் கண்டுபிடிக்க, நுண்ணிய பாக்டீரியாவுடன் 250 கிராம் எடையுள்ள சிறிய ஆய்வகத்தை அனுப்பி வைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கருவி தேர்வு செய்யப்பட்டது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக ஒளிச்சேர்க்கை உள்ளது. ஆனால் நிலவில் மிகக் கடுமையான பருவநிலை இருப்பதால், அதில் வாழ்வது மிகவும் கஷ்டமானதாகும். மேலும் அங்கு புவி ஈர்ப்பு மிகவும் குறைவானது. மேலும் கதிர்வீச்சு அதிகமாகவும் இருக்கும். அதனால், இதை சவாலாக எடுத்துக் கொண்ட மாணவர்கள் புதிய ஆராய்ச்சியை மேற் கொண்டனர்.

அந்த வகையில் 100 டிகிரி வெப்பத்தை தாங்கும் சபேனா பாக்டீரியாவுடன், கண்காணிக்கும் கேமராவை, சென்சார் கருவிகளுடன் இணைத்து ஒரு சிறிய உருளை வடிவத்தில் அடைத்து நிலவுக்கு அனுப்புவது குறித்து ஆராய்ச்சிக் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக் கருவி வரும் டிசம்பர் மாதம் ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆராய்ச்சி, நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு முன்னோடியாக இருக்கும். இதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஒரு பெரும் சாதனையை படைத்துள்ளது. இவ்வாறு துணை வேந்தர் தாஸ் தெரிவித்தார். பேட்டியின் போது, இயற்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

க.செல்வகுமார்.

-nakkheeran.in

TAGS: