மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதிப்பு… வலுக்கிறது விவசாயிகளின் 18 நாள் போராட்டம்

farmer-protest-600

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவு பெருகியுள்ளது. 18வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் உழவர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

18வது நாள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 18 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாத வரை தாங்களும் இங்கிருந்து நகரப் போவதில்லை என்று விவசாயிகள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

பாம்புக்கறி

கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டும் பல்வேறு வகைகளில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், எலிக்கறியைத் தின்று போராட்டம் நடத்திய விவசாயிகள் நேற்று பாம்புக் கறியை வாயில் கடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜ்யசபாவில் எதிரொலி

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களின் பிரச்சனை குறித்து நேற்று ராஜ்ய சபாவில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக திமுக எம்பி திருச்சி சிவா, சிபிஐ எம்பி டி. ராஜா ஆகியோர் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினார்கள். இதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.

தலைவர்கள் ஆதரவு

தமிழக விவசாயிகளின் தொடர் போராட்ட களத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்து பேசினார்கள். அப்போது, விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கக் கூடாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

மாணவர்கள் போராட்டம்

இதனிடையே மாணவர்கள் நேற்று சென்னையில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். மெரினாவிற்கு வந்த மாணவர்கள் கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக பேனர்களைப் பிடித்து முழக்கங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதே போன்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் எழுச்சி

இதே போன்று தமிழம் முழுவதும் விவசாயிகளின் டெல்லிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக காவிரி நதிநீர் மீட்புக் குழு கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

ராகுல் காந்தி வருகை

விவசாயிகளின் வலுக்கும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து போராட்டக்களத்திற்கு இன்று வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக விவசாயிகளை நேரில் சந்திப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

tamil.oneindia.com

TAGS: