நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட இன்றே கடைசி.. தமிழகத்துக்கு அவகாசம் இல்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி

tasmac-shopடெல்லி: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை இன்று முதல் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசே மதுக்கடைகள் நடத்துவதால் கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினமும் நடைபெறும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு, 2012ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு

இந்தத் தீர்ப்பில், அனைத்து மாநிலங்களிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை ஏப்ரல் 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். பழைய கடைகளுக்கான அனுமதியை புதுப்பிக்கக்கூடாது. புதிய மதுபான கடைகளுக்கு எந்த விதத்திலும் அனுமதி அளிக்கக்கூடாது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து விதமான மதுபான கடைகள், பார்களை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மாற்றம் கோரி

மனு இந்த உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன.

பணம் முக்கியமா?

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கே.எஸ்.கேகர் தலைமையிலான முதல் அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி வாதிட்டார். அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழக அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 500 மீட்டர் தூரத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 100 மீட்டர் என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயிர் பலி ஏற்படுகிறது என்ற அடிப்படையில் தான் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டோம். வருமானத்திற்காக உயிர்பலிகள் ஏற்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

அதிரடி தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மூட வேண்டும். தமிழக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 3,321 கடைகள் மூடப்பட வேண்டும்.

இதர மாநிலங்கள்

இதர மாநிலங்களுக்கு செப்.30 வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலையில் மதுக்கடைகளை மூட இன்றே கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: