போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை போலீஸ் அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடுத்து நாட்டில் சட்டம்-ஒழுங்கு நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதில் காவல்துறைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது.
பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. காவல்துறையில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்கள், எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சுதந்திரமாக செல்லும் சூழ்நிலையை காவல்துறை உருவாக்க வேண்டும் என்றார்.