பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது.
ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார் அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்.
அக்ரம் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்.
தமிழகத்தின் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மஹ்மூத் அக்ரம். இவர் தன்னுடைய நான்கு வயதிலிருந்தே மொழிகளை கற்கத் தொடங்கிவிட்டார்.
சிறுவனின் திறமையை அறிந்த தந்தை அப்துல் ஹமீத் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அப்துல் ஹமீத்துக்கு பல மொழிகள் தெரியும்.
தட்டச்சு திறனிலும் அசத்தியிருக்கிறார் அக்ரம். இதனால் அவரின் தட்டச்சு திறனும், கற்கும் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றுள்ளது.
மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது அக்ரம் மற்ற குழந்தைகளை போல இல்லை, சற்று வித்தியாசமானவன் என்று புரிந்து கொண்டு, அக்ரமை ஊக்கப்படுத்தியுள்ளனர் பெற்றோர்.
தன்னுடைய 5 ஆம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களோடு மொழிகளையும் கற்று வந்த அக்ரம், 400 மொழிகள் கற்றுக்கொண்ட பிறகு, வழக்கமான கல்வியிலிருந்து விலகி மொழியியலில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு முடிவெடுத்துள்ளார்.
தற்போது அக்ரம் இஸ்ரேலியப் பள்ளியில் ஆன்லைன் மூலம் படித்துவருகிறார். அதுமட்டுமின்றி ஒரு மொழியை இரண்டு முதல் நான்கு நாட்களில் கற்றுவிடுகிறார்.
எழுத்துகளைக் கற்கும் முன் அகர வரிசை எழுத்துகளையும் பட எழுத்துகளையும் தன்னுடைய மூளையில் துல்லியமாகப் பதிவு செய்துகொள்கிறார்.
அதன் பின் சொற்களைப் படிக்கிறார். பொருள் புரிந்துகொள்கிறார். இப்படி 400 இந்திய, உலக மொழிகளில் மூன்று லட்சம் எழுத்துகளை மூளையில் பத்திரப்படுத்தி இருக்கிறார் அக்ரம்.
யூனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம், 2014-ஆம் ஆண்டு Worlds Youngest Multi Language Typist என்ற விருதை அக்ரமுக்கு வழங்கியிருக்கிறது.
75 நிமிடங்களில் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி முடித்ததன் மூலம் Indian Achiever Book of Records விருதையும் பெற்றிருக்கிறார்.
இந்தச் சாதனையைச் சரிபார்ப்பதற்கே மூன்று மாதங்கள் தேவைபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 400 மொழிகளைப் பரிசோதிக்கக்கூடியவர்கள் கிடைக்காததால், அக்ரமின் கின்னஸ் சாதனை இன்னும் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
அக்ரம் தன்னுடைய நினைவாற்றல் இழக்காமல் இருப்பதற்காக வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை, பதப்படுத்தப்பட்ட பால், நொறுக்குத் தீனிகள், சாக்லேட், ஐஸ்க்ரீம், காபி, டீ போன்றவைகளை சாப்பிடமாட்டாராம்.
சிறுதானிய உணவுகளும், தாகம் எடுத்தால் 4 நிமிடங்களுக்குள் தண்ணீர் பருகுவதும், தினமும் சுடோகு பயிற்சி எடுத்துக்கொள்வதும் நினைவாற்றலுக்கு நல்லது என்று கூறுகிறார் அக்ரம்.
-http://news.lankasri.com