அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்… மோடியும் மனமிறங்குவார்.. அய்யாக்கண்ணு நம்பிக்கை

ayyakannu-meets-kejriwal

டெல்லி: டெல்லியில் 24-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளை மோடிக்கு அவர் எடுத்துரைப்பதாக உறுதி அளித்ததாக தென்னிந்திய நதி நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.

வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களை முன்வைத்த விவசாயிகள் நேற்று கொளுத்தும் வெயிலில் டெல்லி சாலையில் கை,கால்களை கட்டிக் கொண்டு புரண்டனர். அப்போது அய்யாக்கண்ணுவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அய்யாகண்ணு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் போராட்ட களத்துக்கு வந்துவிட்டார். இந்நிலையில் 24-ஆவது நாளாக போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.

கெஜ்ரிவாலுடன் சந்திப்பு

இந்நிலையில் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளை பார்க்க தாமே வருவதாக திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் விவசாயிகளே வந்துவிட்டதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பிரதமரிடம் முறையீடு

பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் நிச்சயம் முறையிடுவேன் என்று கெஜ்ரிவால் உறுதியளித்தார். லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தும் மனமிறங்காத பிரதமர், டெல்லி முதல்வர் சந்தித்து பேசினால் மட்டும் ஆவன செய்வாரா என்று நிருபர்கள் அய்யாகண்ணுவிடம் கேள்வி எழுப்பினர்.

அம்மிக்கு கால் இல்லை

கால்கள் இல்லாத அம்மியே அடிமேல் அடி வைத்தால் நகரும் போது தம்பிதுரை, கெஜ்ரிவால் இன்னும் ஏராளமானோர் சென்று மோடியை சந்தித்து எங்களின் நிலையை கூறிக் கொண்டேயிருந்தால் அவர் நிச்சயம் ஒருநாள் மனமிறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கேயே சமாதியானாலும் ஆவோமே தவிர, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம் என்றார் அவர்.

tamil.oneindia.com

TAGS: