இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு மாத காலம் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த விதிமுறை கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் வரை தங்குவதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், இ-விசா மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தகம் காரணமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்கள் இரண்டு முறை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ சிகிச்சைக் காரணமாக இ-விசா பெற்று வருபவர்கள் மூன்று முறை இந்தியாவிற்குள் நுழைய இந்த புதிய விதிமுறை அனுமதி அளிக்கிறது.
இந்த இ-விசாக்கள் e-tourist visa, e-business visa மற்றும் e-medical visa என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் மும்பை, டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராத்பாத் ஆகிய 6 விமான நிலையங்கள் ‘உதவி மையங்கள்’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 161 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்கள் இ-விசா மூலம் 24 விமான நிலையங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் என மத்திய அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-tamilwin.com