முடிவு தெரியாமல் நகரமாட்டோம்.. மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்.. 26வது நாள் அமைதிப் போர்

farmers-protest4556டெல்லி: தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

மொட்டை அடித்து…

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 26வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் மொட்டை அடித்து வெட்ட வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரத்தம் சொட்ட சொட்ட..

நேற்று தங்களது கைகளை கத்தியால் அறுத்துக் கொண்டு ரணங்களை ஏற்படுத்திக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலர் இன்னமும் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் இருவர்

உண்ணாவிரதம் மேற்கொண்டதில் பெருமாள் என்ற விவசாயி உள்ளிட்ட இருவருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முற்றுகை

இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதில் அய்யாகண்ணு உள்ளிட்ட 17 விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து தடுப்புகளை ஏற்படுத்திய போலீசார் அமைதியான முறையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே போராட்டத்தை நடத்துமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டனர்.

தொடரும் துயரம்

தமிழக விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு தொடக்கம் முதலே மத்திய அரசு முகம் கொடுக்காமல் உள்ளது. எனவே இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும், இதனால் விவசாயிகள் படப்போகும் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் கவலையளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: