டெல்லி: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை டெல்லியில் 23 விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்தும், இதுவரை இவர்களது பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இதனால் இவர்கள் தங்களது போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரபடுத்தி வருகின்றனர்.
எலிக்கறி
கடந்த வாரம் தங்களது போராட்டத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் எலிக்கறி, பாம்புக் கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பயனில்லை.
அரை மொட்டை, பாதி மீசை
வறட்சி நிவாரணம் குறைவாக வழங்கியதை சுட்டிக் காட்டும் விதமாக விவசாயிகள் தங்களது பாதி மீசையை எடுத்தும், அரை மொட்டை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கை, கால்களை கட்டிக் கொண்டு சாலையில் உருண்டு பிரண்டும், பிளேடால் கீறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27-ஆவது தினம்
விவசாயிகளின் போராட்டம் இன்று 27-வது நாளை எட்டியுள்ளது. தற்போது பாதி மீசை, பாதி மொட்டை அடித்தவர்கள் முழு மொட்டை அடித்து கொண்டனர். பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக டெல்லி போலீஸார் வாக்குறுதி அளித்தனர். இதனால் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற வழிகிடைத்ததாக நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இதனால் 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போராட்டத்தை தொடங்கினர்.
உடல்நலக் குறைபாடு
விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக விவசாயிகள் சிலர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட 4 பேர் நேற்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பின்னர் போராட்டம்
அவர்களில் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த முருகன் (56), மேட்டுப்பாளையம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த அகிலன் (19) ஆகிய இருவரும் மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பினர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் (55), துவரங்குறிச்சியைச் சேர்ந்த பழனிசாமி (65) ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பெருமாள், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை நாங்களே செல்வோம்
இதுகுறித்து போராட்டத்தை வழிநடத்தி செல்லும் அய்யாகண்ணு கூறுகையில், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறிய போலீஸாரும் எங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நாளை திங்கள்கிழமை பிரதமரை நாங்களாகவே சந்திக்க புறப்படுவோம் என்றார் அவர்.