நிர்வாணமாக உருண்டது தமிழக விவசாயிகள்.. பறிபோனது நாட்டின் மானம்

farmers-protest2345டெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காமல் அவர்களை நிர்வாணப்படுத்தி மத்திய அரசு கேவலப்படுத்திவிட்டது. இனி இந்தியாவை விவசாயிகள் நாடு என்று கூறுவதற்கு அருகதை உள்ளதா?

விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகையில் நூதன போராட்டங்களை நடத்தியும் அது பலனிக்கவில்லை.

எலிக்கறி

தங்களது வாழ்வாதாரத்தை எண்ணி விவசாயிகள் எலிக்கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றை சாப்பிட்டனர். அப்போதும் மோடி மனமிறங்கவில்லை. பின்னர் அரை மொட்டை , பாதி மீடை எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடை கட்டி போராட்டம்

மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை உயிரிழக்க நினைப்பதாக சித்தரித்து பாடை கட்டி ஊர்வலத்திலும் , ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மோடி மௌனமாகவே இருந்தார்.

தாராள குணம்

தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக போராடி வரும் வேளையில் வங்க தேசத்துக்கு கோடிக்கணக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் விவசாயிகளுக்கு அதிலிருந்து கிள்ளிக் கூட கொடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஏமாற்றம்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாக கூறி டெல்லி போலீஸார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 7 பேரை பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றது. மோடி நாடாளுமன்றத்தில் இருந்தார். ஆனால் அவரை சந்திக்க விடாமல் அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு செயலாளரை போலீஸார் சந்திக்க வைத்தனர். இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

நிர்வாண போராட்டம்

இதனால் 7 விவசாயிகளும் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு முழு நிர்வாணமாக சாலையில் விழுந்து புரண்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனால் விவசாயிகள் கடும் மனவேதனை அடைந்தனர்.

வேடிக்கை

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்காமல் மத்திய அரசு அவர்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பாஜக தரும் கௌரவம் இதுதானா. இனி இந்தியாவை விவசாயிகள் நாடு என்ற எந்த முகத்தை வைத்து கூறுவது. அதற்கு அருகதை உண்டா?

tamil.oneindia.com

TAGS: