அநியாயம்.. கடைசியில், தமிழக விவசாயியிடம் மிஞ்சியிருந்த கோவணமும் அவிழ்க்கப்பட்டது!

farmer-protest-600டெல்லி: கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டனர் தமிழக விவசாயிகள். அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்துள்ளாரா என நாம் விவாதம் நடத்திய வேளையில் அவரது அரையில் கட்டியிருந்த கோவணமும் கழற்றப்பட்டுவிட்டது.

சுமார் 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதில் சில கோரிக்கைகள் மத்திய அரசால் மட்டுமே தீர்க்கப்பட கூடியவை என்பதால்தான், மாநில அரசை நெருக்காமல் டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் அவர்கள்.

பல்வேறு போராட்டங்கள்

ஆனால், பாஜக தரப்பிலோ, மாநில அரசில்தான் இந்த கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்று பதில் வருகிறது. எலிக்கறி, பாம்புக்கறி சாப்பிடும் போராட்டங்கள், தலை முடியை பாதி வழிப்பது, மீசையை வழிப்பது, மொட்டை போடுவது என தங்களை வருத்திக்கொண்டு பல்வேறு வகை போராட்டங்களை நடத்தினர்.

காக்கிதான்

இதன் உச்சமாகத்தான் இன்று, மானத்தையும் பொருட்படுத்தாது ஆடைகளை களைந்து நிர்வாணமாக டெல்லி தெருக்களில் ஓடியுள்ளனர் தமிழக விவசாயிகள். ஜந்தர்மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்த உறுதுணை புரிந்த டெல்லி காவல்துறை, கடைசியில் மோடியை பார்க்க கூட்டிப்போகிறேன் என்று, ஏமாற்றியதால் ஏற்பட்ட கோபம் இப்படி வெளிப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் தங்கள் கடமையில் சரியாகத்தான் இருப்பார்கள், முழுமையாக நம்ப முடியாது என்பதை மெரினாவை போலவே டெல்லியிலும் நிரூபித்துள்ளனர். இந்தியா முழுக்க போலீஸ் வண்ணம் காக்கிதானே.

ஆடிக் கார்

அய்யாகண்ணு ஆடி கார் வைத்திருப்பதாக வதந்தி பரப்பியவர்கள் இப்போது, ஆடிக்கார் வைத்திருப்பவர் எதற்கு நிர்வாணமாக தெருவில் ஓட வேண்டும் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். உயிரை விட மானம் பெரிது என்ற கொள்கை கொண்ட தமிழகத்தில், உயிர் வாழ மானத்தை துறந்து தெருவில் ஓட வைத்துள்ளன இந்த நிர்வாகங்கள்.

கோவணமும் அவிழ்க்கப்பட்டுள்ளது

தண்ணீர் கிடைக்காமை, உரிய விலை கிடைக்காமை என பல்வேறு இன்னல்களால் அடுத்த தலைமுறை விவசாயத்தை மறந்துவிட்டது. ஏற்கனவே உள்ள வயதான விவசாயிகளும் ஒட்டிய வயிறும், எலும்பும், தோலுமாகத்தான் காட்சியளிக்கிறார்கள். அவர்களிடம் பட்டு சட்டைகள் இல்லை, கிழிந்த பனியன்கள்தான் உள்ளன. அவர்கள் கொப்பளிக்க பன்னீர் கேட்கவில்லை, குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள். அவர்களிடம் எஞ்சியது கோவணம் மட்டுமே. இதோ இப்போது அதுவும் அவிழ்க்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: