கடனை ரத்து செய்.. விவசாயிகளை கொல்லாதே.. உடலில் கோரிக்கைகளை எழுதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

farmers-protest2345டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 30வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை மையினால் உடலில் எழுதி போராடி வருகின்றனர்.

தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆதரவு

விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எதிரொலி

விவசாயிகளின் போராட்டம் குறித்து நேற்று ராஜ்ய சபா துணை சபாநாயகர் குரியன், போராடும் விவசாயிகளை ஏன் மத்திய அமைச்சர்கள் சென்று பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விரைவில் அவர்களை பார்க்க ஏற்பாடு செய்ய உள்ளது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உறுதி அளித்தார்.

பாஜக மறுப்பு

விவசாயிகளின் பிரச்சனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியதால், என்ன செய்வதென்று தெரியாத பாஜக அரசு, பயிர் கடன் தள்ளுபடி என்ற பேச்சிற்கே இடமில்லை என்று நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உடலில் எழுதி..

இந்நிலையில், 30வது நாளான இன்று கோரிக்கைகளை விவசாயிகள் தங்களது உடலில் மையினால் எழுதி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். “விவசாயிகளை கொல்லாதே! பயிர் கடன்களை ரத்து செய்து! விவசாய பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்!” உள்ளிட்ட வாசகங்களை மையினால் உடலில் எழுதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: