மின்னல் வேகப் போராட்டம் நடத்தி… சென்னை போலீஸாரை அதிர வைத்த இளைஞர்கள்!

kathiparaசென்னை: சென்னை கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்திதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும், மின்னல் வேகத்தில் கூடி போலீஸாரையே திகைப்பில் ஆழ்த்தி விட்டனர் இளைஞர்கள்.

வறட்சி நிவாரணம் அதிகரித்து வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.

எனினும் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சமாதான பேச்சுவார்த்தைக்கும் அவர்கள் உடன்படவில்லை.

பரபரப்பான பாலம்

சென்னையின் முக்கிய மேம்பாலம் கிண்டி கத்திபாரா மேம்பாலம் ஆகும். இவ்வழியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாலம் ஆகும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பணி நிமித்தமாகவும், பள்ளி,கல்லூரிகளுக்கு, புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

பீக் ஹவர்

காலை 8 மணி முதலே இந்த பாலத்தில் வாகனங்கள் நெரிசலான நிலையிலேயே சென்று வரும். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் காலை முதலே தங்கள் பயணத்தை தொடங்கினால்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்திற்கு பணிக்கோ, பள்ளி, கல்லூரிகளோ செல்ல முடியும்.

பூட்டு போட்டு போராட்டம்

கத்திபாரா மேம்பாலத்துக்கு இன்று காலை இளைஞர், மாணவர் அமைப்பினர் திரண்டனர். பின்னர் பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இருமருங்கிலும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்பு போலீஸாரே வலுக்கட்டாயமாக சங்கிலியை உடைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

மின்னல் வேகம்

மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அறிந்த போலீஸார் அங்கு குவிந்த மாணவர்களை போராட்டம் நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மிகவும் ஜாக்கிரதையாக மாணவர்களும், இளைஞர்களும் மின்னல் வேகத்தில் குவிந்து இங்கு பெரும் போராட்டத்தை நடத்தி மிரட்டி விட்டனர்.

போலீஸார் திகைப்பு

என்னதான் விவசாயிகளுக்கான போராட்டம் என்றாலும் இதனால் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்கள் என்பதை போராட்டக்காரர்கள் மறந்து விடக் கூடாது. அதேசமயம் திடீரென நடந்து முடிந்த இந்தப் போராட்டத்தால் சென்னை போலிஸாரின் செயல் திறன் கேலிக்குரியதாக மாறி விட்டது.

oneindia.com

TAGS: