விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
விவசாயிகள் தற்கொலை
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கண்டனம்
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சி.ஆர்.ஜெயா சுகின் வாதாடுகையில், இந்த வழக்கில் கூறப்பட்ட பிரச்சினையை ஐகோர்ட்டு தனது கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டதாகவும், இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் தகவல் அறிந்து கொள்ளுமாறு உத்தரவிட்டது தவறானது என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நீதிபதிகள் சில கருத்துகளை தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–
மாநில அரசின் கடமை
குடிமக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளானதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை காண வேண்டியது மாநில அரசின் கடமை.
மக்கள் நலனை காக்கும் ஜனநாயக நடைமுறையில் வறட்சி, பஞ்சம், கடன் தொல்லை காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொள்வது மிகவும் கொடூரமானது, வேதனையானது. மக்களை காக்க வேண்டிய மாநில அரசு இதுபோன்ற நிலைமையை சீராக்குவது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்து இருக்கக்கூடாது.
கவலை
அதை விடுத்து, விவசாயிகளின் தற்கொலை அவர்களின் தலைவிதி என்பது போல தமிழக அரசு மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. விவசாயத்தை பிரதானமாக மதிக்கும் ஒரு நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை மிகவும் கவலை அளிக்கக்கூடியது.
சென்னை ஐகோர்ட்டு, இந்த பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவும் வகையில் (அமிகஸ் க்யூரி) மூத்த வக்கீல் கோபால் சங்கர் நாராயண் நியமிக்கப்படுகிறார்.
அறிக்கை
விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையிலும், அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை உரிய ஆவணங்களுடன் இரு வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு இருப்பதாகவும் எனவே, மத்திய அரசுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் தலையாய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்று கூறினார்கள். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-dailythanthi.com