டெல்லியில் ரோட்டில் குட்டிக்கரணம் போட்டு விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குட்டிக்கரணம்
வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நேற்று 31–வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் ரோட்டில் குட்டிக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கேரள இல்லம் வரை அவர்கள் குட்டிக்கரணம் போட்டபடி சென்றனர். கொளுத்தும் வெயிலில் அவர்கள் கோஷம் எழுப்பியவாறு குட்டிக்கரணம் போட்டு சென்றது டெல்லி வாழ் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
நடிகர் கருணாஸ் ஆதரவு
இந்த நிலையில் டெல்லி சென்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதற்கிடையே கோவை மாவட்டத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த 7 விவசாயிகள் நேற்று மாலை போராட்டத்தில் பங்கேற்றனர். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில் சிலர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
-dailythanthi.com