வெறும் 20 பைசாவுக்கு விற்கப்படும் இந்தியர்களின் வங்கி விபரம்: வெளியான அதிர்ச்சி தகவல்

bankஇந்தியாவில் ஒரு கோடி வங்கி கணக்கு விபரங்களை தலா 20 காசுகள் விலையில் விற்பனை செய்யப்படுவதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு டெல்லியில் கிரடிட் கார்டை பயன்படுத்தி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.46 லட்சம் திருடப்பட்டுள்ளதாக 80 வயது பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இதனை மையமாக கொண்டு பொலிசார் விசாரணையை துவக்கி தகவல்களை திருடி தந்த தரகரான முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளியிடம் இருந்து சுமார் ஒரு கோடி இந்தியர்களின் வங்கி கணக்கு விபரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவரின் கிரடிட்/டெபிட் கார்டு எண், அதன் சொந்தக்காரரின் பெயர், அவரின் பிறந்த திகதி, மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இருந்துள்ளது.

அந்த விபரங்கள் 20 ஜிகாபைட்களுக்கும் மேலாக இருந்துள்ளன. இந்த வங்கி விபர பட்டியலில் பெரும்பாலானவை மூத்த குடிமக்களுடையதாகும்.

கைது செய்யப்பட்ட புரன் குப்தா, ஒரே நேரத்தில் 50,000 பேரின் தகவல்களை திருடி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவற்றை ரூ.10,000 முதல் 20,000 வரைக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, புரன் குப்தா, டேடா என்ட்ரி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளான். அப்போது வங்கி தகவல்களை விற்பனை செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து 2010 ம் ஆண்டு நிறுவனம் ஒன்றை துவக்கி உள்ளான்.

இதனையடுத்து சில இணையதளங்களில் தங்களின் விளம்பரத்தை பதிவு செய்துள்ளனர். இதில் சிலர் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கு விபரங்களை இமெயில் மூலம் பெற்று வந்துள்ளனர். ஒருவரின் வங்கி கணக்கு விபரம் 10 முதல் 20 பைசாவுக்கு விற்கப்பட்டுள்ளது.

புரன் குப்தாவும், அவனது நண்பரும், ஒருவரின் விபரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்களிடம் வங்கி பிரதிநிதிகள் போல் பேசி, அவர்களின் சிவிவி (Card Verification Value) எண், ஓடிபி உள்ளிட்டவற்றை வாங்கி உள்ளனர்.

அதனைப் பயன்படுத்தி பணம் எடுத்துள்ளனர். சில நேரங்களில் தாங்கள் தொடர்பு கொண்ட நபர் உஷாராவதற்குள் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு, அவர்களின் கணக்கை முடக்கி விடவும் செய்துள்ளனர்.

-http://news.lankasri.com

TAGS: