3 அமைச்சர்கள் பதவி பறிப்பு: தமிழக பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்? சிக்கலில் எடப்பாடி அரசு

tamilnaduவருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைக்கு பின்னர் அமைச்சர்கள் காமராஜ் உள்ளிட்ட 3 பேரின் பதவிகளை பறிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்பட்டது.

இதையடுத்து, ஆதாரங்களை அழித்தல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ், அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வருமானவரி அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், அவர்கள் மீது இதுவரை, காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், அந்த அமைச்சர்களும் முன் ஜாமீன் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து இன்று அவசரமாக சென்னை வந்து, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் இந்த விவகாரம் தொடர்பில் தகவல்களை முதலில் கேட்டறியும் ஆளுநர், அதன் பின்னர் முதல்வர் பழனிசாமியிடம் பேச உள்ளார்.

அதனால், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், மூன்று அமைச்சர்களும், தளவாய் சுந்தரமும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ராஜினாமா கடிதம் பெறுவதற்காக தம்பிதுரை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ராஜினாமா தகவல் வெளியாவதற்கு முன், அதிகாரிகளின் சோதனைக்கு இடையூறு செய்த மற்ற அமைச்சர்களின் பதவி நீக்க அறிவிப்பு வெளியாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-lankasri.com

TAGS: