மும்பை: மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்ற இன்ஜினியரிங் மாணவர்கள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேர் மாணவிகள் ஆவர்.
கர்நாடக மாநிலம் பெல்காமில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று சிந்துதர்க் மாவட்டம் வெய்ரி கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு சில மாணவ, மாணவிகள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சற்று ஆழத்திற்குச் சென்ற மாணவர்கள், கடல் அலையில் சிக்கிக்கொண்டனர்.
3 பேர் மீட்பு
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் 3 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.
8 பேரின் உடல்கள் மீட்பு
இதையடுத்து மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்புப்படையினரும் அப்பகுதி மீனவர்களும் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. அவர்களில் 3 பேர் மாணவிகள் ஆவர்.
இருவர் கவலைக்கிடம்
கடலில் தத்தளித்த 19 பேர் அப்பகுதி மீனவர்கள் மற்றும் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சோகம்..
சுற்றுலா சென்றபோது மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை முருடு கடற்கரைக்கு சுற்றுலா வந்த 13 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறுப்பிடத்தக்கது.