மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினரும், அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியுமான மு.அபிநயா, தொடர்ந்து வரலாற்று தேடலில் ஈடுபட்டு வருகிறார். அவர், திருப்புல்லாணியில் இருந்து கமுதி வழியாக, மதுரை செல்லும் வழியில், அதிக கழுமரங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளார்.
குறிப்பாக, மண்டலமாணிக்கம் அருகே கழுவன்பொட்டலில், அதிகமாக கழுவேற்றம் நடந்ததற்கான தடயங்களை கண்டறிந்துள்ளார். மேலும், திருப்புவனம், உத்தரகோசமங்கை அருகில் உள்ள கண்ணன்குடி, கோவிந்தனேந்தல்; கமுதி அருகில் உள்ள
மண்டலமாணிக்கம் ஆகிய ஊர் கோவில்களில், தலா, மூன்று கழுமரங்கள் உள்ளதையும், களரியில், கழுமரம் கருவறை தெய்வமாக வணங்கப்படுவதையும் கண்டறிந்துள்ளார்.
கழுமரங்கள் பற்றி யும், அதன் வழிபாடு பற்றியும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர், வே.ராஜகுரு கூறியதாவது:
பழங்காலத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கழுமரங்கள் அமைக்கப்பட்டன. அரசை எதிர்ப்போர் மற்றும் திருடர்களுக்கு கழுவேற்றி, தண்டனை வழங்கப்பட்டது.
பொதுவாக, கழுவேற்ற வேண்டியவரை நிர்வாணமாக்கி, மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனையில், அவரின் ஆசனவாயை சொருகி விடுவர். இவ்வாறு கழுவேற்றப்பட்டவர், பல நாட்கள் கதறி துடிதுடித்து, உயிர் விடுவார். இறந்த உடலை, நாய், நரி, கழுகு, பருந்து போன்றவை உண்ணும்.
மக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்த கழுமரங்களில் உறைந்து, தெய்வத்தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.
பொங்கலுடன் ஆட்டு ரத்தத்தை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது.
கழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்.
விட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதிக கழுமரங்கள்ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகில் உள்ள பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் தான், ஐந்து கழுமரங்கள் காணப்படுகின்றன. அக்கழுமரங்களில் தெற்கத்தி முனியசாமி, கோவிந்தன், ஊர்வலசாமி, கருப்பணன், நொண்டி கருப்பணன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இச்சிற்பங்களின் இரு கைகளிலும், ஆயுதங்கள் ஏந்தி காட்சியளிப்பதால், இவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்கலாம் என, யூகிக்க முடிகிறது.
மதுரையில், சமணர்களை கழுவேற்றியதாக, பெரிய புராணம் கூறுகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளில் கழுமர வழிபாடு, பல நுாற்றாண்டுகளாக தொடர்வது வியப்பாக உள்ளது.
கழுமர வழிபாட்டிற்கு, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காரணம் கூறப்படுவது, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
– Dina Malar