தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் யாருமே மது அருந்துவது இல்லை. வரதட்சணை வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை என வாழ்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது ஆலவிழாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் 700 ஆண்டுகளாக மது அருந்துவது இல்லை என்ற கொள்கையினை கடைபிடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் திருமணத்திற்காக வரதட்சணை வாங்குவது இல்லை. கொடுப்பதும் இல்லை.

இந்த கிராமத்தில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் அங்கு மது அருந்துவது இல்லை.

ஊரில் யாராவது மது அருந்தியது தெரிய வந்தால் ரூ. 10,000 முதல் 1 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கல்வியும் வழங்கப்படுகிறது.

இந்த கிராமத்தின் வரலாற்றினை குறித்து கிராம புலவர் ராமசாமி என்பவர், ”அங்குள்ள மக்கள் கர்நாடக மாநிலத்தினை பூர்விகமாக உடையவர்கள்”.

”1282ம் ஆண்டு அங்கு 2 பிரிவினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட போது ஒரு பிரிவினர் தப்பி செல்வதற்காக தமிழகத்திற்கு வந்தபோது ஒரு பெரிய ஆறு வழியில் குறுக்கிட்டது”.

”அப்போது பொன்னழகி என்ற அம்மன் தோன்றி தப்பி வந்த மக்களிடம் அவர்களை காப்பாற்றுவதாக கூறி மது அருந்த கூடாது, வரதட்சணை வாங்க கூடாது என நிபந்தனையினை விதித்தது”.

”அவர்கள் அதற்கு கட்டுபட்டு சத்தியம் செய்த போது கரையில் இருந்த பெரிய மரமொன்று சாய்ந்து அவர்கள் ஆற்றை கடப்பதற்காக பாதையினை உருவாக்கியது”.

”மறுகரை வந்தவுடன் செப்பு தகட்டில் சத்தியத்தினை பொறித்து வைத்துள்ளனர். பிற்காலத்தில் கிராமத்திற்குள் நுழையும் வழியில் கல்வெட்டில் பொறித்து வைத்தனர்”.

“கல்லும் காவிரியும் உள்ள வரை

புல்லும் பூமியும் தீரும் வரை

சூரியனும், சந்திரனும் வாழும் வரை

மது குடிக்க மாட்டோம் – தெய்வ சத்தியம்” என்று அந்த வரிகள் உள்ளன என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ராமசாமி என்பவர், “நாங்கள் வடநாடு விட்டு தென்னாடான இங்கு வந்தோம். இன்றளவும் கூட உள்ளூரில் யாரும் மது அருந்த மாட்டோம். வெளியில் இருந்து மது அருந்தி விட்டு வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். வரதட்சணை வாங்கவும் மாட்டோம். கொடுக்கவும் மாட்டோம்.

இது எங்கள் முன்னோர் சொல்லிய போதனை. இதனை மீறவும் மாட்டோம். இந்த சத்தியத்தை மீறுபவர்களுக்கு ஊர்க்கூட்டம் கூட்டி, ரூ.10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மற்ற பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் பச்சை குத்துவதை நாகரிகமாக பின் பற்றுகின்றனர். எங்கள் கிராம இளைஞர்கள் பச்சை குத்திக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆலவிழாம்பட்டி கிராமத்தின் மைய பகுதியில் சவுக்கை என்ற கூடம் உள்ளது. கிராமத்தில் ஏதேனும் முக்கிய விழாக்கள், பிரச்சினைகள் குறித்து இந்த சவுக்கை கூடத்தில் தான் முடிவு செய்யப் படுகிறது.

அப்போது கிராமத்தின் அனைத்து மக்களும் அங்கு கூடிவிடுவார்கள். மேலும் யாராவது மது அருந்தியது தெரியவந்தால் இந்த கூடத்தில் வைத்து தான் விசாரணை மேற்கொண்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.

-http://news.lankasri.com

TAGS: