நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன்!

dhinakaranஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர்.

தினகரனிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று நள்ளிரவில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அ.தி.மு.க. அம்மா அணியின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெற அவர் பல்வேறு வழிகளில் முயன்று இருக்கின்றார்.

இதேவேளை, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக முறைகேடான வழிகளில் முயற்சி செய்துள்ளார் தினகரன். இதற்காக ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசி எட்டரை கோடி ரூபாயை முன்பணமாகவும் கொடுத்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தினகரனின் வேண்டுதலின் பேரில், தரகர் சுகேஷ் சந்திரா டெல்லியில் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். அந்த தகவலின்படி, தரகர் சுகேஷ் சந்திராவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர் டெல்லிப் பொலிஸார்.

இவர் தவிர, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலதிகமாக தினகரனின் தொலைபேசி அழைப்புகளையும் பொலிஸார் ஆய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டினர்.

திரட்டப்பட்ட ஆதரங்களைக் கொண்டு, தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர், கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நீடித்திருந்தது.

எனினும், நான்கு நாட்களாக 37 மணி நேரம் நடந்த விசாரணை நள்ளிரவில் நிறைவடைந்து, முடிவில் தினகரன் கைது செய்யப்பட்டதுடன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

-tamilwin.com

TAGS: