வருகிற மே 25-ந்தேதிக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஐயாக்கண்ணு

திருச்சி: புதுடெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் திருச்சி வந்தனர். அவர்களை பல்வேறு தரப்பினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை பெற்று தருவேன் என்றார். இதுவரையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக தொடர்ந்து போராடினோம்.

ஜனாதிபதி, தமிழக முதல்வர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் ஆதரவளித்தனர். என்ன நடந்தாலும், தமிழகத்தை திரும்பி பார்க்க மாட்டோம் என்பது மத்திய அரசின் நிலையாக உள்ளது.

தேர்தலின் போது விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்று கூறுபவர்கள் தேர்தலுக்கு பிறகு அடிமைகள் என்கிறார்கள். எங்கள் போராட்டத்தை ஒடுக்க பா.ஜனதா கடுமையாக முயன்றது.

போராட்டத்தின் போது கொலை மிரட்டல் உள்பட பல மிரட்டல்களை சந்தித்தோம். அதையும் மீறி 41 நாட்கள் போராடினோம். பல மாநில விவசாயிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர். பஞ்சாப் விவசாயிகள் விளைபொருளுக்கு விலை இல்லை என்று கொதிக்கின்றனர். பிரதமர் மோடி சந்திக்க மறுத்தால் நிர்வாண போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.

எங்களின் கோரிக்கைகளான 60 வயதான விவசாயிகளுக்கு பட்டா நிலம் இருந்தால் பென்சன், விவசாய கடன்களை மிரட்டி வசூலிக்க மாட்டோம் என்பது உள்ளிட்டவற்றை மே மாதம் 25-ந்தேதிக்குள் நிறைவேற்றுவதாக மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஆகியோர் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில் மீண்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் டெல்லியில் போராடுவோம். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த ‘பந்த்’ முழு வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-maalaimalar.com

TAGS: