சென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு…கைகொடுக்குமா கல்குவாரி தண்ணீர்?

waterசென்னை: சென்னையில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்க கல்குவாரி குட்டை நீரை பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கிய ஏரிகளாக உள்ளன. இந்த ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தற்போது இந்த நான்கு ஏரிகளிலும் 801 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் சென்னை மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் நோக்கியுள்ளது.

வீராணம், கண்டலேறு நீர்

வீராணம் நீரும் ஆந்திர மாநில கண்டலேறு நீரும் சென்னைக்கு இப்போது வருவதில்லை. இரண்டு தண்ணீர் ஆதாரங்களும் வறண்டுவிட்டன.

குடிநீர் வினியோகம் குறைப்பு

சென்னைக்கு தினமும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதமே குடிநீர் வினியோகிக்கும் அளவை 550 மில்லியன் லிட்டராக குடிநீர் வாரியம் குறைத்து விட்டது.

குவாரி குட்டைகள்

இதனால் சாலைகளில் குடத்துடன் பொதுமக்கள் அலைகிறார்கள். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள குவாரி குட்டைகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், கல்குவாரி குட்டைகள், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் உள்ள தண்ணீர் மற்றும் போரூர் ஏரியில் உள்ள தண்ணீரைச் சுத்திகரித்து விநியோகம் செய்ய உள்ளது குடிநீர் வாரியம்.

சமாளிக்க முடியுமா?

இந்தத் தண்ணீர் கைகொடுத்தால் மட்டுமே சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும். விவசாய கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: