இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ சிறப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையை துண்டித்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பயங்கரத்தை அரங்கேற்ற ஏதுவாக, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அமைந்துள்ள 2 ராணுவ முகாம்கள் மீது ராக்கெட் வீசி கடும் தாக்குதலையும் நடத்தி உள்ளது.
பாகிஸ்தானின் திட்டமிட்ட இந்த சதிக்கு இந்தியா தகுந்த பதிலடி தர எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணகாட்டி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள துணை ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்திய எல்லைகளை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர், இந்திய எல்லையில் சுமார் 250 மீற்றர் தூரத்திற்கு உள்ளே புகுந்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கூட்டு நடவடிக்கை அதிகாரி பரம்ஜித்சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைமை ஏட்டு பிரேம் சாகர் இருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
மேலும் இருவரது உடலையும் சிதைத்துள்ளனர். இந்த தாக்குதலில், மற்றொரு பிஎஸ்எப் வீரர் ராஜேந்திரசிங் படுகாயம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.
இதற்கு முன்பும் பாக் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு, உடலை சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். 2013, ஜனவரி மாதம் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ், பாகிஸ்தானின் எல்லை அதிரடி சிறப்பு படையினரால் தலை துண்டித்து, உடல் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார்.
2008, ஜூன் மாதம் கேல் செக்டார் பகுதியில் இந்திய வீரர் ஒருவரை கடத்திச் சென்றனர். சில நாட்களுக்கு பின் அவரது உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையல் மீட்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் சமயத்தில் கேப்டன் சவுரவ் கலியா, பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து செல்லப்பட்டு பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.
அவரது உடல் சிதைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2016, அக்டோபர் 28 மசில் செக்டார் பகுதியில், தீவிரவாதிகள் ராணுவ முகாமை தாக்கி இந்திய வீரர் ஒருவரை கொன்று உடலை சிதைத்தனர்.
-lankasri.com