சென்னை: தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமானுஜர் அமுல்படுத்திய சீர்திருத்தங்கள், இன்னும் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளன. ஜாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்த அந்தக் காலத்தில், ஜாதிய வேறுபாடுகளை வேரறுக்க இராமானுஜர் மிகப்பெரும் பங்காற்றினார்.
சமுதாயத்திலிருந்த ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டுள்ளன. முற்போக்குச் சிந்தனைகள் பெருகியுள்ளன. பிற்போக்குச் சிந்தனைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. கடவுளின் முன் அனைவரும் சமம்; பக்தி அனைவருக்கும் பொதுவானது என்ற இராமானுஜரின் சிந்தனை போற்றத்தக்கது.
இராமானுஜரின் வழிகாட்டுதலின்படி, ஏழைகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் என சமுதாயத்தின் அனைத் துத் தரப்பினருக்கும் சமநீதி கிடைக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும். இராமானுஜரின் கொள்கைகளை, வழிகாட்டுதலை, போதனைகளை, இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வது நம் கடமை.
இவ்வாறு முற்போக்கு முத்திரைகளை மொழிந்துள்ள பிரதமர் மோடி அவர்களே, உங்களது சொந்த மாநிலமான குஜராத்தில் சென்ற ஆண்டு தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய இளைஞர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த கடும் நடவடிக்கைதான் என்ன? தங்களது பேச்சு தேன் கலந்த பேச்சுதான். ஆனால், நடைமுறையில் ஜாதி, தீண்டாமையை ஒழிக்க பா.ஜ.க. ஆளும் பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள்தான் என்ன?
இராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் மறுக்கவில்லை – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பூணூல் போட்டு, மந்திரங்களை அனைவரும் அறிந்துகொள்ள பொது முழக்கம் செய்தவர் என்பது அவரது வாழ்க்கை நிகழ்வுகளானால், இன்று அவரைக் கொண்டாடுவோர் – ஜாதி – தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி, கருவறைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஜாதியை – வருணாசிரமத்தை விரட்ட தந்தை பெரியார் அறிவித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இதற்கென இரண்டு முறை சட்டங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, உச்சநீதிமன்றம்வரை சென்ற வைதீக, சனாதன அர்ச்சக கனபாடிகள் தங்கள் முயற்சியில் தோற்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பு அளித்து, சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும், இன்னமும் அது கிணற்றில் போடப்பட்ட ‘பாறாங்கல்லாகவே’ செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதே, அது சரிதானா?
இராமானுஜரைக் கொண்டாடும் பக்தர்கள் அவர் காட்டியதாகச் சொல்லப்படும் வழியையாவது பின்பற்றிச் செயலாற்ற இந்த ”அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தை அத்துணை ஆகமக் கோவில்களிலும் நடைமுறைப்படுத்த, ஏற்கெனவே சிவாகமம், வைணவ ஆகமம் போன்றவைகளில் முறையான பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி பயிற்சியாளர்கள் இன்றும் 200 பேர்கள் தயார் நிலையில் வேலையின்றி பல ஆண்டுகளாக உள்ளார்களே அவர்களை நியமிக்க முன்வரவேண்டாமா? அகில இந்திய அளவில்கூட சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தலாமே. அவரைப் பின்பற்றும் பிரதமர் மோடி அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வருவாரா என கேட்க விரும்புகிறேன்.
ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்தவர். தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்தவர். ராமானுஜரின் லட்சியக் கனவுகளை நிறைவேற்றாமல் வெறுமனே பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று கி.வீரமணி கூறியுள்ளார்.