30 வருடங்களாக…! இயற்கையை நேசிக்கும் இந்த மாமனிதரை பற்றி தெரியுமா?

தமிழ்நாட்டில் நபர் ஒருவர் இதுவரை 3 லட்சம் செடிகளை விதைத்துள்ளதோடு, மற்றவர்களுக்கும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் யோகநாதன் (47), அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.

யோகநாதன் எட்டாம் வகுப்பு படித்த போது செடிகள் நட்டு இயற்கையை பேணி காக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு வந்துள்ளது.

அன்றிலிருந்து தற்போது வரை சராசரியாக 3 லட்சம் செடிகளை யோகநாதன் விதைத்துள்ளார்.

இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட செடிகள் மரங்களாக வளர்ந்துள்ளன.

இதுகுறித்து யோகநாதன் கூறுகையில், பன்னிரெண்டாம் வகுப்புடன் என் படிப்பை நிறுத்தி விட்டேன்.

ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த செடிகள் நடும் ஆர்வம் மட்டும் எனக்கு குறையவில்லை.

தமிழ்நாடு பசுமை இயக்கத்தில் சேர்ந்து செடிகள் நடும் பணியை செய்ய ஆரம்பித்தேன்.

இதுவரை 3000 பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செடிகள் விதைத்தல், மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

பள்ளிக்கூட வளாகங்களிலும் செடிகளை நட்டு வருகிறேன்.

செடிகளை நடும் போது அதன் அருகில் புற்களை இடவேண்டும் என நான் பள்ளி சிறுவர்களிடம் கூறுவேன். காரணம், இது வேர்களை பாதுகாக்க உதவும் என தெரிவித்துள்ளார்.

யோகநாதன் நட்ட செடிகளில் பல 15லிருந்து 20 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன.

கடந்த 17 வருடங்களாக பேருந்து நடத்துனராக வேலை பார்க்கும் யோகநாதனை நிர்வாகம் இதுவரை 40 முறை பணியிடை மாற்றம் செய்துள்ளது.

இதற்கு காரணம், அவர் அடிக்கடி பணியில் விடுப்பெடுத்து செடிகளை நடுவதற்கு பல்வேறு இடங்களுக்கு போய்விடுவது தான்.

பூமி பாதுகாப்பு வாரியர் விருதை இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமித் ஹன்சாரியிடமிருந்து, யோகநாதன் கடந்த 2008ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

யோகநாதனின் மனைவி வளர்மதி, மகள்கள் மோனிஷா (24) சத்ய ப்ரியா (18) ஆகியோரும் அவரின் செடிகள் நடும் பணிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

-lankasri.com

TAGS: