காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க 3 ஆயிரம் ராணுவ வீரர்கள், போலீசார் தேடுதல் வேட்டை

gunbattleoninkashmirஸ்ரீநகர்,

காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

சமூக வலைத்தளங்கள்

காஷ்மீரில், போலீசாரை தாக்கி துப்பாக்கிகளை பறிப்பது, வங்கிகளை கொள்ளையடிப்பது என பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், அங்குள்ள பழ தோட்டம் ஒன்றில், 30 பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் இருப்பது போன்ற புகைப்படம் ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேடுதல் வேட்டை

எனவே, பயங்கரவாதிகளை பிடிக்க ஷோபியான் மாவட்டத்தில் நேற்று காலை பிரமாண்ட தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இதில், ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், காஷ்மீர் மாநில போலீசின் சிறப்பு நடவடிக்கைகள் குழுவினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் சுமார் 25 கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். வனப்பகுதிகள், பழ தோட்டங்களிலும் இந்த சோதனை நடந்தது. அப்போது, சில இடங்களில் மோதல் நடந்ததாக தகவல்கள் வெளியானது.

வீடு வீடாக..

கிராமங்களில் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கி சரிபார்த்தனர். இந்த சோதனையின்போது, யாரையும் வீட்டை விட்டு வெளியேற பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வாபஸ்

காலை முதல் மாலைவரை நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் யாரும் பிடிபடவில்லை. இதையடுத்து, மாலையில், இந்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும், வழக்கமான ரோந்து பணி நீடிக்கும் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

-dailythanthi.com

TAGS: