முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிக்கை (நோட்டீஸ்)

mullaiperiyarபுதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழக அரசு மனு

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தமிழக அரசின் சார்பில் கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு பராமரிப்பு பணிக்காக செல்லும் தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்களை கேரள அரசு அனுமதிக்க மறுக்கிறது. பராமரிப்பு பணிக்கான தளவாடங்களை கொண்டு செல்லவும் அனுமதிப்பது இல்லை. இதனால் அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம்.

உத்தரவிட வேண்டும்

எனவே, பராமரிப்பு பணிக்காக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு தமிழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடையின்றி சென்று வரவும், முல்லைக்கொடி மழை அளவு நிலையத்துக்கு சென்று தேவையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அணைக்கட்டு பகுதியில் உள்ள வல்லகடவு காட்டு வழிச்சாலையை செப்பனிட அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நீதிபதிகள் ஒய்.வி.சந்திரசூட், சஞ்சய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதாடுகையில், அணையில் சாலை வசதிகள், மின்சார வசதி செய்தல் போன்ற மராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகள் எளிதாக போய் வரமுடியவில்லை என்றும், இதனால் மராமத்து பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

கேரள அரசுக்கு நோட்டீஸ்

கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரகாஷ் வாதாடுகையில், ஏற்கனவே மேற்பார்வை குழு ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்த குழுவே அனைத்து மராமத்து பணிகளையும் பார்த்துக் கொள்வதாகவும், எனவே இந்த மனுவை தனியாக விசாரிக்க தேவை இல்லை என்றும் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 2–வது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

-dailythanthi.com

TAGS: