ஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா, காவல்காரனா?

athar card

இந்தியாவில், ஆதார் என்பது அடையாள அட்டை என்பதைத் தாண்டி, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் என்ன நடக்கிறது, ஒவ்வொரு தனி மனிதனும் எங்கு, எப்படி, எதனால் செல்கிறார்கள் என்பதுவரை கண்டுபிடிக்கும் ஓர் உளவாளியைப் போல பயன்படுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக, பல்வேறு தரப்பிலும் கவலைகளும், கண்டனங்களும் அதிகரித்து வருகின்றன.

ஆதார் அட்டையில் தனி நபரைப் பற்றிய விவரங்களுடன், அவரது கைவிரல் ரேகைகள், கண் பாவை உள்ளிட்ட விவரங்களும் இடம் பெறுகின்றன. அந்த விவரங்களைப் பதிவிட்டு, அச்சிட்டு வழங்கும் பொறுப்பு பல தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்கள், கசியவிடப்படுவதால் அனைத்து ரகசிய விவரங்களும் வெளியாகி, தனி நபர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தன்னார்வலர்களால் கவலை வெளியிடப்படுகிறது.

ஆனால், ஆதார் அட்டையை விருப்ப அடிப்படையில்தான் பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை: பிரத்யேக தகவல்கள் அரசு வலைதளத்தில் கசிந்தன

மாறாக, வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரிக்கணக்கு எண் வரை, ஆதார் எண்ணை அனைத்திலும் இணைக்க வேண்டும் என்று அரசு மறைமுகமாக நிர்பந்தித்து வருவதாகப் புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதைப் போல அமைந்திருக்கிறது, இந்திய அட்டார்னி ஜெனரல், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்திருக்கும் வாதம்.

எந்த ஓர் ஆணோ, பெண்ணோ அவர்களது உடல் மீது முழு உரிமை கொண்டாட முடியாது என்பதுதான். பெரும்பான்மையானவர்களை அதிர்வடையச் செய்திருக்கும் வாதம்.

இது, தனி மனித உரிமையைப் பறிக்கும் அரசின் நேரடி நடவடிக்கை என்று சாடுகிறார், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன்.

“ஒரு மனிதனுக்கு அவரது உடல் மீது முழு உரிமையில்லை என்று சொல்லும் அட்டார்னி ஜெனரல், அதற்கு மூன்று உதாரணங்களைச் சொல்கிறார். தற்கொலை, கருக்கலைப்பு மற்றும் மூச்சுப் பரிசோதனை ஆகிய மூன்றையும் குறிப்பிடுகிறார். அதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது” என்கிறார் ஹென்றிடிஃபேன்.

மொபைல் தொலைபேசி இணைப்புப்பெற கட்டாயமாகிறது ஆதார் எண்

உச்சநீதிமன்றத்தில் இருப்பது ஆதார் அட்டை தொடர்பான வழக்கு. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அரசு நிதி மசோதாவில் திருத்தம் செய்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய முயற்சி எடுத்திருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

“அரசின் நடவடிக்கையால், பள்ளியில் அடிப்படை உரிமை மீறப்படும், கல்வி கிடைக்காது, ஆதார் அட்டை தராவிட்டால் மருத்துவ சிகிச்சை கிடைக்காது, மருத்துவ உரிமை மறுக்கப்படும். ரேஷன் கடைகளில் பொருள்கள் மறுக்கப்பட்டு, உணவுக்கான உரிமை மறுக்கப்படும். பயணத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது, ஆதார் தேவை என்கிறார்கள். அதனால், நாம் சுதந்திரமாக பயணிக்கும் உரிமையும் மறுக்கப்படும்” என்று விளைவுகளைப் பட்டியலிடுகிறார் ஹென்றிடிஃபேன்.

“அடிப்படை உரிமைகளான வாழ்வுரிமை, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, மாண்பிற்கான உரிமையை பறிப்பதற்கான வழியை உச்சநீதிமன்றத்தில் வாதமாக எடுத்து வைத்திருக்கிறார் அட்டார்னி ஜெனரல்”.

“உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாப் பாராட்டப்பட்ட இந்த நாட்டை, எங்கு சென்றாலும் நம்மை யாரோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்களை அச்சத்தில் வைத்திருக்கக்கூடிய ஓர் அரசாக மாற்றுவதற்கு அட்டார்னி ஜெனரல் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்” என்பது ஹென்றி டிஃபேனின் வாதமாக உள்ளது.

மொபைல்ஃபோன் நிறுவனங்கள் உங்கள் நடவடிக்கைகளை தொடர முடியும் என்ற அட்டார்னி ஜெனரலின் வாதம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹென்றிடிஃபேன், “நம் நாட்டில் ஆவணங்களை எப்படி பாதுகாப்பாக பராமரிக்கிறார்கள் என்பதைப்பற்றி ஏற்கெனவே ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்டில் ஆதார் கார்டு தகவல்கள் எப்படி வெளியில் வந்தன? எப்படி பாதுகாப்பாக வைக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிவிக்காமல் எப்படி நம்புவது? ஒரு பக்கம் இதைப் பாதுகாப்பாக வைப்போம் என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் அதைப் பாதுகாக்க முடியவில்ல,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தோனியின் ஆதார் அட்டை தகவல்களை வெளியிட்ட நிறுவனத்துக்கு தடை

எத்தனை வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த ஆவணங்களைக் கையாள்கின்றன என்ற விவரங்கள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் வாதங்களாக வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதை விருப்பத்தின்பேரில்தான் அமல்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால், தீர்ப்பை முறியடிக்கும் வகையில் ஜனநாயக, மனித உரிமைகளுக்கு முரணாக செயல்பட அட்டார்னி ஜெனரல் சென்றிருக்கிறார் என்பது மனித உரிமை ஆர்வலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

பல போராட்டங்களுக்கு மத்தியில் இத்தனை காலமாக பாதுகாத்து வைத்திருக்கும் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது., சின்னச்சின்ன விடயங்களுக்காக பெரிய உரிமைகளை கொடுத்துவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கிறார்.

`குறுக்கு வழியை நாடும் அரசு’

பான் எனப்படும் வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தக் கணக்கு எண்களை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கை, போலி பான் எண்களை ஒழிக்கும் நடவடிக்கை என்ற அரசு தரப்பு வாதம் முற்றிலும் தவறானது என்கிறார் ஹென்றிடிஃபேன்.

“பான் எண்களை கொண்டு வந்தது சீன அரசு அல்ல, இந்த அரசுதான். மக்களின் உரிமைகளைப் பறிக்கும் விடயத்தை விவாதித்து, பாதுகாப்பாV நிலையில்தான் அறிமுகம் செய்ய வேண்டும். நிதி மசோதாவைக் கொண்டுவர, வருமான வரி வாதத்தைக் கொண்டு வந்து குறுக்கு வழியைத் தேரந்தெடுத்திருக்கிறார்கள். நமது உரிமைகள் எல்லாம் இதுபோன்று குறுக்கு வழியில்தான் பறிக்கப்படும் என்று பயந்து இருக்கிறோம்”.

நாடாளுமன்ற சட்டம் இயற்றும் உரிமையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசு வாதம் செய்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் என்ன செய்ய முடியும், மனித உரிமை அமைப்புக்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

“அடிப்படை உரிமைகளை மீறும் செயலை, நாடாளுமன்றம் சட்டமாக அறிமுகம் செய்தால், அதைத் தடுக்கின்ற, மறுக்கின்ற உரிமை உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது” என்பது ஹென்றிடிஃபேனின் கருத்து.

ஆபத்தில் சிக்கவைக்கிறதா ஆதார் அட்டை?

“நமது நாட்டின் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கோபம், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக மாற்றதுக்காகப் பேசுவோர், இந்த நாட்டு நீதிமன்றங்களில் பேசாமல் ஐ.நாவின் வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள் என்பதுதான். என்னைப் போன்றோருக்கு எதிராக, எஃப்சிஆர்ஏ வழக்கில் அவர்கள் வைத்துள்ள வாதம் இதுதான். இத்தகைய வாதங்களை நீதிமன்றத்தில் வைத்தால், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஐநா.சபையின் வெவ்வேறு அரங்கங்களை நாட வேண்டிய அவசியம் உள்ளது. ஆளும் கட்சிதான் இந்த நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது” என்கிறார்.

பொது மக்கள் இதில் என்ன செய்ய வேண்டும்?

பொதுமக்களுக்கு என்ன நடக்கிறது என்று சொல்லாமல் பதிலை மட்டுமே கேட்கிறோம். அனைத்து வாதங்களையும் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்ல வேண்டும். தொலைக்காட்சி வாதங்களில் மட்டும் வாதம் செய்வது போல செய்யாமல், பொதுமக்களுக்கு தகவல்களை கொடுத்து முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்கிறார்.

ஆதார் அட்டை அவசியமா?

“அடையாளம் தேவை. ஆனால் அதில் எனது பயோமெட்ரிக் எல்லாம் இருக்கும்போது, அதை எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்று தெரியப்படுத்தாமல் செய்யப் போகிறார்கள் என்றால் அது கண்டிப்பாக எனது அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் நடவடிக்கையாகவே இருக்கும். மனித உரிமைப் பார்வையில்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது” என்பதே ஹென்றிடிஃபேனின் கருத்தாக உள்ளது.

`தனிநபரை விட நாடுதான் முக்கியம்’

ஆனால், நாட்டின் பாதுகாப்பை விட எதுவுமே முக்கியம் இல்லை என்பது ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வாதமாக உள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி, “ஆதார் அட்டையில், கைவிரல் ரேகை, கண் பாவை ஆகியவை பதிவு செய்யப்படுவதால் 100 சதம் பாதுகாப்பான அம்சமாக உள்ளது. இதனால், நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது” என்கிறார் அவர்.

ஒவ்வொருவரும் தனி உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டைப் பொருத்தவரை, “சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் அரசியல் சட்டம் உரிமைகளைக் கொடுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பை பார்க்கும்போது, முழுமையான தனிப்பட்ட உரிமையை யாரும் கோர முடியாது” என்று அட்டார்னி ஜெனரலின் வாதத்தை இவரும் பிரதிபலிக்கிறார்.

ஆதார் :சில திட்டங்களுக்கு மக்கள் விரும்பினால் விஸ்தரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

“தீவிரவாதிகள் வங்கிக் கணக்கு வைத்து, அதை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. அதனால், இரண்டையும் இணைக்கும்போது, தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைகளைத் தடுக்க முடியும். ஆயுத தீவிரவாதத்தைவிட பொருளாதார தீவிரவாதம் இன்னும் ஆபத்தானது” என்பது ஆசீர்வாதத்தின் வாதமாக உள்ளது.

மேலும், நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை, ஊழல் புரிவதைத் தடுப்பதற்கான முக்கிய கருவியாக ஆதார் விளங்கும் என்றும் ஆசீர்வாதம் ஆச்சாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஆனால், மனித உரிமை என்ற ஒன்று இருக்கும் வரை, ஆதாருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதே ஆர்வலர்களின் நிலைப்பாடாக உள்ளது.

-BBC

TAGS: