சென்னை : லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முறை வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு விட்டதால் மக்கள் குடிநீருக்காக அல்லோகலப்படுகின்றனர்.
அந்தந்த மாவட்ட குடிநீர் வாரியம் தண்ணீர் விநியோகம் செய்துவந்தாலும், அது 20 நாள்களுக்கு முறை, 10 நாள்களுக்கு ஒரு முறை என்றே உள்ளது. கோடை காலத்துக்கு முன்பே மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஆர்ப்பாட்டம்
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி மக்கள் ஆங்காங்கே சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கியபோதிலும் இது காலம் கடந்த ஞானம் என்றே கருதப்படுகிறது.
நீர் நிரப்பு மையங்களில்…
சென்னை குடிநீர் வாரியம் தினமும் லாரிகள் மூலம் 6,000 மேற்பட்ட முறைகள் தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றன. லாரி மூலம் தங்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் பெற விரும்புவோர் அருகில் உள்ள நீர் நிரப்பு மையங்களுக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இணையம் மூலம்…
தற்போது பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு www.chennaimetrowater.com என்ற இணையதளத்தில் தங்களுக்கு தேவையான அளவு குடிநீரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
முதலில் வருபவருக்கு…
மேலும் இணையதளம் மூலம் குடிநீர் பெற விரும்புவோருக்கு ‘முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை’ அடிப்படையில் தண்ணீர் அனுப்பப்படும். மேலும் பதிவு செய்தவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து புகாரை அந்த இணையதளத்தில் தெரிவிக்கலாம்.
தொலைபேசி மூலம்…
044-4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டு முறைகளும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனினும் நீர் நிரப்பு மையங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்யும் முறையும் செயல்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
-http://tamil.oneindia.com