முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையை நேரில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பாரதி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேரில் வீடு, வீடாக வந்து உதவி தொகையை வழங்குவார்கள். இந்த திட்டம் முதலாவதாக உருளையன்பேட்டை தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் ஜூன் 1-ந் தேதி முதல் நேரடியாக பணம் வழங்கப்படும். வங்கி ஊழியர்கள் அதற்கான எந்திரத்துடன் நேரில் வந்து பயனாளிகளின் கைரேகை பதிவுகளை சரிபார்த்த பின்பு பணத்தை கொடுப்பார்கள்.
இதற்காக அனைத்து பயனாளிகளின் ஆதார் அட்டையை இந்த வங்கி கணக்குடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி நடந்து வருவதால் திட்டத்தை அமல்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணி முடிந்து விடும்.
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. கோர்ட்டில் வழக்கு உள்ளதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
புதுவையில் ஹெல்மெட் அணியாமல் சென்று அதிகம் பேர் உயிர் இழப்பதால் தான் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்தினோம். இதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும், பொது மக்களின் கருத்துக்களை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-maalaimalar.com