டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் பிசினஸ் படு ஜோர்! முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே கொடுமை

spritசேலம்: முதல்வர் மாவட்டம் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமலும், சமூக விரோத செயல்கள் நடக்காமலும் இருக்கும் என்று எதிர்பார்த்தால், இப்போதைய முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தின் நிலைமையே தலைகீழாக இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

மாவட்டம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் கள்ளச் சாராயம் மட்டும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது என்கிறார்கள் சேலம் மக்கள். அதிலும் ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் சாராய விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு, சேலம் மட்டுமல்லாது திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கள்ளச்சாராயம் விநியோகிக்கப்படுகிறது என்று தகவல்கள் அதிரவைக்கின்றன.

வறட்சி காரணம்

ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. விவசாயம்தான் இங்கே அடிப்படையான தொழில். ஏராளமான பண்ணைத் தோட்டங்கள், பழத்தோட்டங்கள் உள்ளன. ஆனால் இப்போது மழையில்லாமல் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக விளைச்சல் இன்றி விவசாய நிலங்கள் வறண்டுபோயுள்ளன.

மலையில் கள்ளச்சாராயம்

இதனை கள்ளச்சாராய அதிபர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு சாராயத்தை ஆறாக ஓடவிடுகிறார்கள். இங்குள்ள, மண்ணூர், நாவலூர்பட்டிவளவு, கிரான்காடு, பொரையூர், நடுவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் மிக வெளிப்படையாக நடந்து வருகிறது. விற்பனையும் கனஜோராக நடந்து வருகிறது. இதை போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

டாஸ்மாக்கிற்கு பதிலாக

டாஸ்மாக் மூடிய தமிழக அரசு,அதற்கு மாற்றாக சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே புதியதாக சாராயக் கடைகளைத் திறக்க அனுமதித்துள்ளது போல இருக்கிறது இப்போதைய சேலம் மாவட்ட நிலைமை. மலையோரம், எரிக்கரைகள் என்று எல்லா பகுதிகளிலும் புதிய சாராயக்கடைகள் முளைத்துள்ளன. மலையில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், லாரி டியூப்கள் மூலம் தினமும் தலைசுமையாக கூலி ஆட்கள் மூலம் தூக்கி வரப்படுகிறது.

பாக்கெட் சாராயம் ரூ.50

சிறு வியாபாரிகள் மூலம் பாக்கெட் 50க்கு விற்பனை செய்யப்படுகிறது.மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் கண்டுகொள்ளாமல் இருக்க, மாதந்தோறும் உரிய முறையில் வியாபாரிகள் கவனித்தும் வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க, அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் இணைந்து போலீசார் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் வனத்துறையினரும், அமலாக்க பிரிவினரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: