தமிழில் வரும் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட உள்ளது

menn tamil

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய மென்பொருள்

கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ என்ற புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த மென்பொருள் ஒன்றின் விலை 300 ரூபாய் ஆகும். இதனை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, 30 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் தமிழ் மென்பொருள் தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் வெளியிட்டார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை வெளியிட்டார். அதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் (பொறுப்பு) ரா.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) கோ.விசயராகவன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: