தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இறுதியாக 5 மற்றும் 6-வது அணு உலைகளை ரஷியா உதவியுடன் கட்டுவது என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை கட்டுவதற்கான உடன்பாட்டில் முடிவு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இரவு ரஷியா சென்றார். அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவர் தங்கினார். நேற்று காலை பிரதமர் மோடி அந்நகரில் உள்ள 2-ம் உலகப் போரில் இறந்த 5 லட்சம் வீரர்களின் நினைவிடம் மற்றும் கல்லறைக்கு சென்றார். அங்கு வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கோன்ஸ்டன்டின் அரண்மனையில் (ரஷிய அதிபரின் மற்றொரு அரசு இல்லம்) ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய-ரஷிய தலைவர்கள் பேச்சுவார்த்தை இப்போது தான் முதல்முறையாக மாஸ்கோவுக்கு வெளியே பீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கிறது.
புதினுக்கு நன்றி தெரிவித்தார்
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினிடம் உங்கள் சொந்த ஊரில் இந்திய பிரதமராக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வழக்கமாக இரு நாடுகளிடையேயான சர்வதேச உறவுகள் ஏற்ற, இறக்கத்துடன் தான் இருக்கும். ஆனால் இந்தியா-ரஷியா இடையேயான உறவு எப்போதும் ஒரே சீராக உள்ளதை வரலாறு கண்டுவருகிறது என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா உறுப்பினராவதில் முக்கிய பங்காற்றியதற்காக புதினுக்கு மோடி நன்றி தெரிவித்தார். அதற்கு புதின், இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுஅளவில் உறுப்பினராக ஆகும் என்றார்.
ரஷியர்கள் இதயத்தில்…
காலையில் ரஷிய வீரர்களின் கல்லறைக்கும், இறந்த வீரர்கள் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தியதையும் புதினிடம் குறிப்பிட்ட மோடி, ‘தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்துவந்த தலைவர் நீங்கள். உங்கள் சகோதரர் ஒரு போர் தியாகி’ என்றார்.
போர் நினைவிடத்திற்கு சென்றதற்காக நன்றி தெரிவித்த புதின், இதுபோன்ற இடங்கள் ரஷிய மக்களின் இதயத்தில் சிறப்பு இடம் பெற்றவை என்றார்.
பின்னர் இரு தலைவர்களும் ‘21-ம் நூற்றாண்டுக்கான ஒரு தொலைநோக்கு அறிக்கை’ ஒன்றையும் வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் 5, 6-வது அணுஉலைகள்
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இறுதியாக 5 மற்றும் 6-வது அணு உலைகளை ரஷியா உதவியுடன் கட்டுவது என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது. இதற்கான பொது கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் நிதி தொடர்பான அறிவிப்புகள் இந்தியா-ரஷியா இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள வருடாந்திர பேச்சுவார்த்தையில் வெளியிடப்படுகிறது. இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த அணு உலைகளை இந்திய அணுமின் கழகம் மற்றும் ரஷிய அணுசக்தி ஏற்றுமதி நிறுவனம் ஆகியவை இணைந்து கட்டுகின்றன. இந்த 2 அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை.
இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே ஒரு எரிசக்தி பாலத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். அணுமின் நிலையங்கள், ஹைட்ரோ கார்பன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட அனைத்துவகைகளிலும் எரிசக்தியை மேம்படுத்த இருநாடுகள் இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12 ஒப்பந்தங்கள்
கூடங்குளத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டு மின் உற்பத்தி செய்துவருகிறது. 3, 4-வது அணு உலைகள் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வருடாந்திர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெரிய அளவிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரெயில்வே, கலாசார பரிமாற்றம், தனியார் உள்பட இதர வர்த்தக மேம்பாடு ஆகியவை அடங்கும். கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் இதில் முக்கியமானதாக இருக்கும்.
தனிப்பட்ட விருந்து
வருடாந்திர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார கருத்தரங்கிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். ரஷியாவில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் இந்திய பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறை.
பின்னர் ரஷிய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவியாளர்கள் யாரும் இன்றி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.
-dailythanthi.com
இது வேண்டாமே …. அணு மின் நிலத்திற்கு பதில் , தமிழ் நாட்டில் உள்ள 2 பெரிய ஆறு களில் நீர் தேக்கம் செய்து , hydro electric செய்தால் நீர் பிரச்னை குறையும் அதே வேலை மின்சார உற்பத்தியும் அதிக படுத்தலாம் …
இப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு, அந்த அணு உலைகள் கட்டி முடித்து துவக்கப்படும்போது கலவரமும் ஆர்ப்பாட்டமும் செய்வதே நம்மவர்கள் வேலை.போங்க..போய் இப்பவே அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக் கோரி அதற்கானதை உடனே செய்யுங்கள்.