சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை: வாயால் தேர்வெழுதி சாதித்த சிறுவன்

இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான்.

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும் போதே arthrogryposis multiplex congenita என்கிற நோய் தாக்கியுள்ளது.

இதனால், கருவில் இருக்கும்போது, கை, கால் மூட்டுகளில் வளர்ச்சி குன்றியது. பிறந்தது முதல் இருபது அறுவைசிகிச்சைகள் செய்தும் எந்தப் பலனுமில்லை. மண்ணைத் தொட்டது முதலே வீல்சேர் வாழ்க்கை.

இந்த சூழ்நிலையிலும் துகின் தேவு சி.பி.எஸ்.இ தேர்வும் எழுதியுள்ளார். முழுத்தேர்வையும் வாயில் பேனா பிடித்தபடி எழுதியிருந்தார். எழுதுவது மட்டுமல்ல, செல்போனை இயக்குவதிலிருந்து பல விஷயங்களை வாயினாலேயே செய்ய கற்றுக்கொண்டார்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வில், துகின் 88 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்று அசத்தியிருக்கிறார்.

இதனால், பெற்றோரும் துகினும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். துகினின் இலக்கு 95 சதவிகிதமாக இருந்தது. மதிப்பெண் குறைந்தது சற்று வருத்தத்தைத் தந்தாலும், மேற்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகக் கூறுகிறார்

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் ஐஐடி நுழைவுத்தேர்வுக்காகத் தன்னைத் தயார்படுத்திவருகிறார். கோட்டாவில் உள்ள ஆலென் கரியர் இன்ஸ்டிட்யூட், ஐஐடி பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங்போல ஆக வேண்டும். வருங்காலத்தில் ஐஐடி-யில் சேர வேண்டும் என உற்சாகத்துடன் கூறும் துகின், கடந்த 2012-ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும், 2013-ஆம் ஆண்டு சிறந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைக்கான விருதையும் பெற்றிருக்கிறார்

துகின் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஸ்டீபன் ஹாக்கிங், துகின் இருவரையும் தாக்கிய நோய்கள் வெவ்வேறானவை.

ஆனால், இருவரது மூளை வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், இதுபோன்றோருக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

-lankasri.com

TAGS: