புதுடில்லி : ஆசிய கண்டத்தில் ஊழல் மிகவும் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் திறம்பட செயல்பட்டுவருவதாக இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வே நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரான்பரன்சி இன்டர்நேசனல் எனும் சர்வதேச அமைப்பு, ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை மக்கள் மற்றும் ஊழல் – ஆசிய பசிபிக் – குளோபல் ஊழல் பாரோமீட்டர் என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டது.
2015ம் ஆண்டு ஜூலை முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்பதனடிப்படையிலான கருத்துக்கணிப்பின்படி, ஊழல் பட்டியலில் இந்தியா (69 சதவீதம்) முதலிடத்திலும், ஜப்பான் (0.2 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளது.
இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-dinamalar.com